Tuesday, June 26, 2012

சூரியா


கல்லூரிக்கு முதல் நாளாக செல்கிறேன். இவன், இதோ எங்கோ பார்த்துக்கொண்டு ஸ்கூலுக்கு செல்வது போல் பேக் மாட்டிக் கொண்டு, வகுப்பிற்குள் நுழைகிறான். சற்றே வயதான ஆள் போல தோற்றமளிக்கிறான். மெதுவாய் நடக்கிறான். மூன்றாவது வரிசையில் அமர்கிறான். விளங்குகிறது: பெரிய படிப்பாளி அல்ல; மக்கும் அல்ல. யாரிடமும் பேச விருப்பப்படாதவன் போல், இதோ... அமைதியாய்... எங்கோ பார்த்துக்கொண்டு... இவன் தான் சூரியா. சூரிய பிரகாஷ்.

முதலாம் ஆண்டு என்பதால் எல்லா வகுப்புகளும் நடக்கும். பொறியியல் என்றாலும், கஷ்டமாய் ஒன்றும் இல்லாதளவு, எளிதான பாடங்கள் – டிராயிங் தவிர. டிராயிங் என்றாலே எரிச்சலாக வரும். அதற்க்கு பரிமளா என்று ஒரு நான்கு அடி ஐந்து அங்குல டீச்சர் வேறு. கணிதம் பலர் கஷ்டப்பட்டு படித்தனர். டிராயிங் – அய்யகோ தான்.

எங்கள் வகுப்பு முதலாம் ஆண்டிலே கொஞ்சம் டெர்ரர். பல விஷயங்களில் மாட்டிக் கொண்டதால், இருபது எம் ஒன் அர்ரியர். கல்லூரியில் மதிப்பெண்ணுக்கு பெரிய மதிப்போன்றும் இல்லை. பாஸ் ஃபெயில் என்ற இரண்டே பிரிவு தான். தன்னாட்சி (autonomous) என்பதால், ஆசிரியர்கள் கோவமெல்லாம் மதிப்பெண்ணிலும் இந்த பாஸ் ஃபெயில் மாற்றத்திலும் மட்டுமே பிரதிபலிக்கும். உங்கள் பெயர் வாத்தியாருக்கு தெரிந்திருந்தால், அது எப்படி என்பதை பொறுத்து.

சூரிய பிரகாஷ் பாஸ் தான். அம்பத்தாறு மார்க் - எம் ஒன்னில். அவனுக்கு அது ஒரு மதிப்பெண்ணாக தெரியவில்லை.

“நான் நல்லா தான் டா எழுதினேன். என்னமோ, கடமைக்கு மார்க் போட்ருக்காங்க?” – அவன்.

சரி தான் இவன் சொல்வது. கடமைக்கு தான் திருத்துவார்கள். இன்னொரு நல்லா எழுதினவனுக்கு ஃபெயிலே போட்டிருக்கிறார்களே என்று நாம் மனம் குளிர்ந்திட வேண்டும். ஆனால் சூரியா அப்படி விடவில்லை. ரீ-இவேலுவேஷனுக்கு விண்ணப்பம் செய்தான். எண்பதோ எவ்வளவோ வந்தது.

     “நான் எழுதினதுக்கு கூடவே போட்டிருக்கணும். ஏதோ கடமைக்கு திருத்தி போட்டிருக்கானுங்க!”. என்று கூறினான்.

இப்படியாக நம் ஐயா சூரியா, மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். சூரியா ஒரு டே-ஸ்காலர். அவன் வீடு கல்லூரியில் இருந்து நடக்கும் தூரம் தான். அதுவே அவனுக்கு மாணவர்களுடன் பழக ஒரு தடை போல் ஆனது. இரண்டாம் வருடம் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க முயற்சித்து தோற்று, இரண்டாவதாக முடிந்து, எங்களுடன் ஒன்றானான்.

இரண்டாம் ஆண்டு நாங்கள் படிக்கும் பொழுது ஒரு விடுதி தான் இரண்டாம் ஆண்டிற்கு. அதனால், மூன்று பேர் தங்குவதற்கு இடம் போதாதென்கிறது போன்ற இடத்தில், மூன்று பேர் தங்குமாறு ஆயிற்று. சூரியா அனைவருக்கும் நண்பன். வந்து விடுதியில் தங்கி, இரவுறங்கி என பல இருவுகளை விடுதியிலும் கழித்திருக்கிறான்.

ஒரு மனிதன் எப்படி எல்லோருடனும் நண்பனாக இருக்க முடியும் என்பதை, இவன் சுய சரிதை எழுதினால் தான் தெரிந்துகொள்ள முடியும். யாராவது புத்தகம் பற்றி பேசினால் அவன் புத்தகம் பற்றி பேசுவான். யாரேனும் சினிமா பற்றி பேசினால், சினிமா பற்றி... கிரிக்கெட், ஃபுட்பால், பொறியியல், நவீன தொழில்நுட்பம், இலக்கியம், பத்திரிகைகள், காதல், திருமணம்... இன்னும் என்னென்ன வகையறா உள்ளதோ, அவை அனைத்தும். முழுதாக தெரியவில்லை என்றாலும், மற்றவர்களை பேச வைத்து கேட்டு தெரிந்து கொண்டேனும், அடுத்த முறை அந்த தலைப்பில் பேசுகையிலே நன்றாய், உற்சாகமாய், நிறைய பேச வைக்கும் விதத்தில் பேசுவான்.
எல்லோருக்கும் பிடிக்கும் என்றாலே பொறுப்புகள் அதிகமாகி விடும். சுதந்திரம் இருக்காது. நான் இவனுக்கு ரொம்ப நெருக்கமில்லை. தூரமுமில்லை. ஹாய்-பாய் ரக நட்பும் அல்ல. எல்லா நாளும் அழைத்து பேசும் வண்ணம் ஒரு நட்பும் அல்ல. இவன் தோழன். நல்லவன். டிராவிட் மற்றும் கமலஹாஸன் ரசிகன். என் நெருங்கிய எதிர்பால் உறவுகள் பற்றி இவனுக்கு தெரியும். நிறையவே.

எங்கள் கல்லூரியில் ஈ.ஸீ.ஈ டிபார்ட்மென்ட் பக்கத்திலே ஒரு அருமையான இடம் உண்டு. நாட்டாமைகளின் ஆலமரத்தடி போல சிமென்ட் பென்ச் இருக்கும் அங்கே, இரண்டு பழைய காலத்து போர் வாகனங்கள் நிற்கும். அர்ரியர் பாலா என்று அறியப்பட்ட பாலசுப்ரமணியன் எனற ஜியாலஜி வாத்தியார் அறை அங்கு தான் இருந்தது. இரவு அங்கே அருமையாக இருக்கும். உக்கார்ந்து கதை பேசி கதை பேசி தீராத தருணங்கள் அங்கே பல முறை முளைத்திருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு நல்ல காதலின் ஆரம்ப கால நான்கு மணி நேர தொலைபேசி பேச்சுவார்த்தையும் அங்கே தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் பேசுவதை கேட்க ஆளில்லை என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் சூரியா நல்ல துணையாக இருந்தான். மனிதனின் மோசமான காலகட்டங்களில் அவனுடன் இருப்பவனை விட, அவன் சந்தோஷத்தை கண்டு சந்தோஷப் படுபவர்கள் கிடைப்பது தான் கஷ்டம். பிறர் நல்வாழ்வைக் கண்டு பொறாமை கொள்வோர் தான் அதிகம் இங்கே. சும்மா, காதலில் வெற்றி என்று சொல்லிப் பாருங்கள், எத்தனை பேர் சிரிப்பார்கள், தொடர்ந்து முன் போலவே நடந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. இவன் சிரிப்பான். உறவை மேம்படுத்த டிப்ஸ் கொடுப்பான். அழுக்கற்ற உள்ளம்.
ஒரு முறை டிராபிக் போலீஸிடம் மாட்டிக் கொண்டான். மறந்துவிட்டேன். அவனிடம் ஒரு ஸ்கூட்டர் உள்ளது. அதை யாரும் அவ்வளவு எளிதில் ஓட்டி விட முடியாது. அதை அவன் ஓட்டும் அழகே தனி. அதன் சத்தமும், அதை ஸ்டார்ட் செய்ய அவன் படும் பாடுமே தமாஷ் தான். அதற்க்கு ஒரு ஹெல்மெட் வேறு வைத்திருப்பான்.
“தம்பி, ஹெல்மெட் எங்க?”
“இல்ல ஸார்”
“லைசன்ஸ்?”
“இல்ல ஸார்”
“வண்டி பேப்பர்ஸ்??”
“அதுவும் இல்ல ஸார்”
போலீஸ் நீண்ட நேர மனக்கணக்கிற்க்கு பிறகு, “ரெண்டாயிரம் ரூபாயாகும்”
“இந்த வண்டியே அவ்வளவு தான் ஆகும்”
ஏதோ, இருக்கும் கொஞ்ச நல்ல போலீஸ்களில், ஒரு போலீஸ் இவர். விட்டுவிட்டார்.

அவன் அப்பா, நாங்கள் மூன்றாமாண்டு படிக்கையில் இறந்து போனார். அவனைக் கண்டு நான் வியந்தேன் என்று தான் சொல்லிட வேண்டும். ரொம்பவும் சுய நினைவுடன், மிக சாந்தமாக இருந்தான். வேட்டி கட்ட தெரியவில்லை என்று சிரித்து கொண்டிருந்தான். நான் தான் அவனுக்கு வேட்டி கட்டி விட்டேன். அவன் அப்பாவுக்கு புற்று நோய். பல நாட்கள் கழித்து கேட்ட போது, “எதிர் பாத்தது தான் மச்சான்” என்றான்.

சூரியாவைப் பற்றி சொல்லும் யாரும் அவன் அம்மாவைப் பற்றி கண்டிப்பாய் சொல்லாமலிருக்க மாட்டார்கள். சூரியா அம்மாவை எனக்கும் பிடிக்கும். எனக்கு நெறைய நாட்கள் தோசை ஊத்தி கொடுத்திருக்கிறார்கள். எங்களுடன், சூர்யாவை விட சகஜமாக பேசுவார்கள். காதல் பற்றி, இந்த காலத்து பெண்கள் பற்றி எல்லாம். சூரியா அவன் அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவான். என் எதிர்ப்பால் உறவுகள் பற்றியும் சொல்லி இருப்பான். என்னிடம் அவர்கள் ஓரிரு முறை கேட்டதும் உண்டு. இன்னும் ஒரு சிலருக்கோ, சூர்யாவை விட, சூரியா அம்மாவை ரொம்ப பிடிக்கும்.

கொஞ்சம் நாட்கள் எங்கள் ப்ளேஸ்மென்ட் ரெப்ரெஸன்டேடிவாக இருந்தான். பிறகு குடும்ப சூழல், அது இது என்று சில காரணம் வந்து எல்லாம் மாறி விட்டது. அவனும் நல்ல ஒரு மின்னணுவியல் துறை சார்ந்த ஒரு கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தான். அம்மா அவனோடு தான் இருக்கிறார். நன்றாக பார்த்து கொள்கிறான்.

சமீபத்தில் அம்மா சென்னை வந்திருந்த பொழுது, என்னோடு பேசிக்கொண்டிருந்தார்கள். “அவனுக்கு நான் இப்போ ஒரு எக்ஸ்ட்ரா லோட் மாதிரி. உங்கள மாதிரி பேச்சலர் லைஃப் அவனுக்கு கெடைக்கல. என் ஆசை இதான். ‘பை’ல காசு வசுருக்கணும். நெறைய. இப்பிடியே போய்டே இருக்கணும். எண்ணாம செலவு செய்யணும். இப்போ கெடச்சுருக்கு”. எல்லோரும் எல்லோருக்கும் சுமை தான். பேச்சலர்க்கு அந்த வாழ்க்கை சுமை. இப்படி இருக்கும்போது இது சுமை. அப்படி இருக்கையில் அது சுமை. அம்மா கண் நிறைந்து இருந்தது. அவர்களே துடைத்துக் கொண்டார்கள்.
“எல்லாம் சரி ஆய்டும் ம்மா”, என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்தேன். இன்றும் பேசுகையில், “அம்மா கிட்டயும் சொல்ல முடியாத சில விஷயங்கள் இருக்கும். அந்த மாதிரி நெலமையில என்ன சித்தியா நெனச்சுக்கோ” என்று சொல்லும் சூரியாவின் அம்மா எங்கள் ஒவ்வொருவருக்கும் அம்மா தான்.

தொலைத்தொடர்பு வளர்ந்து விட்டதால் இன்றும் அவனுடன் பேசும் இனிமை கிடைக்கிறது. சேட், ஃபோன் கால், எஸ்.எம்.எஸ்.... ஆனால், பலராக சென்னைக்கு வந்த எங்கள் வகுப்பில் இவனும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிற லிஸ்டில் இவனுக்கும் ஒரு இடம் உண்டு.

சொல்ல இன்னும் எவ்வளவோ பாக்கி இருக்கிறது. இவனுடைய அரை-நிர்வாண புகைப்படம், என்னுடைய முதல் வாசகன், பார்த்து டெஸ்ட் எழுதாத ஒரே ஆள், அவனுடைய வண்டிகள், அவனுடைய டிஃபன் கேர்ரியர், அப்பா, வீடு, கிரிக்கெட் ஆட்டங்கள், ஆச்சி மெஸ், மீசை, வாக்குவாதங்கள். இன்னும் எவ்வளவோ. இந்த கதை, இத்துடன் முடியவில்லை. சூரியா ஒவ்வொரு நாளும் உதிக்கிறான், இந்த தேவா மனதில்.