எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. பாட்டி இறந்து
போன நாள். நான் பிறந்த பிறகு என் குடும்பத்தில் போகும் முதல் உயிர். பாட்டி.
இருபது நாட்கள் ஆசுபத்திரியில் இருந்தாள். பதினைந்து நாட்கள் வென்டில்லேட்டரில்
வைத்திருந்தார்கள். ஒரு முறை பார்க்க அழைத்து சென்றார்கள் என்னை. தொண்டையில்
துளையிட்டு, அதன் மூலம் ஜூஸ் போன்றவற்றை உணவாக கொடுத்தார்கள். எனக்கு வயது
பதினான்கு. பதினான்கு வருடங்களாக மரணத்தை பார்க்காத ஒரு குடும்பம் மரணத்தை
காணும்போது பல ஆண்டுகளாக காணாத சில கண்ணீர் துளிகள், காணக்கிடைக்கிறது.
அது ஒரு வோர்கிங்டே. எனக்கு ஸ்கூல் இருந்தது.
நான் சுவர் ஓரமாக படுத்திருந்தேன். காலை ஐந்து மணிக்கு அம்மா தட்டி எழுப்பினார்.
“மோன்ட அச்சம்மா மரிச்சு””, என்று சொன்னார்கள். எனக்கு தூக்கம் தேவையாக இருந்திருக்க
வேண்டும். “அச்சம்மே!!!””, என்று அழைத்து குப்புற படுத்து இன்னும் இரண்டரை மணி நேரம்
உறங்கினேன். அன்று, “ஏன் அதிகம் உறங்கினாய்?” என்று யாரும் கேட்கவில்லை. எழுந்து
பார்த்தபோது பந்தலிட்டுக்கொண்டிருந்தார்கள்.
பந்தல் இடுவதற்கு குழி பறிக்க வேண்டும். அதில்
கால்களை நட்டு ஆட்கள் உயரத்திற்கு, வேயப்பட்ட ஓலையால் பந்தல் கூரை கட்டுவார்கள். பின் அதில் கயிறு
கட்டி அவர்கள் கட்டிய கூரையை மேலே தூக்கி ஒரு நல்ல உயரத்திற்க்கு உயர்த்தி கயிறால்
கட்டி விடுவார்கள். ஷாமியானா போடும் இந்த காலத்தில், எங்கள் வீட்டு வாசலில் நின்ற
கூரை புன்சிரிப்பை வரவழைத்தது.
அன்று கார்த்திகை தீபம். அதனால் பாட்டி
புண்ணியம் செய்தவளாகவே கருதப்பட்டாள். நிறைய பேர் அதற்குள் செய்தி தெரிந்து
வந்திருந்தார்கள். அப்பா, சித்தப்பாக்களுடைய நண்பர்கள், அயல் வீட்டார்,
சொந்தங்கள். சிலர் வந்துக்கொண்டிருந்தார்கள். அப்பா மலையாளத்தில்
பேசிக்கொண்டிருந்தார்: “எல்லாரும் சொல்வாங்க, ‘அம்மிணியே! கோபி நெத்தியிலே வச்ச
போட்டு மாய மாட்டேங்குது. நீ சுமங்கலியா தான் போவ’ – னு. அது உண்மையா தான்
ஆய்டுச்சு”
பெண் தனியாக வாழ்வது கடினம் என்பதற்கு அவள்
சுமந்கலியாய் இறந்திட வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன வேடிக்கை!!! ஒரு பெண்
அவள் கணவன் இறந்தபின் வாழ்ந்தால் அவள் சபிக்கப்பட்டவளா??? மரணம் என்பது
என்றானாலும் இந்த மலம் நிறைந்த உடலிலிருந்து அழுக்கற்ற ஆன்மாவுக்கு விடுதலை தானே?
அப்பாவைச் சுற்றி ஐந்தாறு பேர் அமர்ந்து, கண்ணீர் வற்றிய கன்னங்கள் வழியே ‘உம்’’ கொட்டிய படியும் , ‘ஆம்’’ பாணியில் தலையாட்டிய படியும் இருந்தார்கள்.
அப்பா தொடர்ந்தார், “பெண்கள் பல்லைக்
கடிச்சுக்குட்டு வாழ்ந்துடுவாங்க. ஆனா, ஆண்கள் அப்படி இல்ல. பெண்ணு போயிட்டா,
சகிச்சுக்க மாட்டாங்க””, இரண்டு முரண்பாடான வாக்கியங்கள். சோகம் நிறைந்த
மனம் போதை ஏறியது போல தான். பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கும்.
போர்ட்டிகோவில் பாட்டி படுத்திருந்த கட்டில்
போடப்பட்டிருந்தது. நான் அன்று ஸ்கூலுக்கு போகவில்லை. ஃபோன் செய்து நண்பனிடம் லீவ்
சொல்லிவிடுமாறு சொன்னேன். பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கும்,
அழாதவர்களுக்கும் இட்லி சுட்டுக் கொண்டுவந்தார்கள். சட்னியில் உப்பு கம்மியாக இருந்தது.
அதை சொல்ல முடியாத நிலைமை, அதனால் சொல்லவில்லை.
நவம்பர் மாதம் என்பதால் கொஞ்சம் குளிராக
இருக்கும். மொட்டை மாடி என்பது என் வயதுடைய அனைவருக்கும் பிடித்த ஒன்றாகவே
இருக்கிறது. தனியாக மொட்டை மாடியில் அமர்ந்திருக்கும் நேரம் நம் வாழ்வில் எல்லா
நாட்களைப் பற்றியும், வினாடிக்கு ஒரு நாள் என்று வைத்து நினைத்துப் பார்க்க முடிகிறது.
பாட்டியை நினைத்து ஒரு கண் மட்டும் கண்ணீர் விட்டது. பாட்டிக்கு நான் உயிராக
இருந்தேன். எனக்கு, ஒரு டைப் ஆஃப் பீப்பிளில் நான் தான் கடைசி மனிதன் என்ற
நினைப்பு உண்டு. நான் பாட்டி கதைகள் கேட்டு வளர்ந்த கடைசி சிலரில் ஒருவன்.
மகாபாரதம், ராமாயணம் என்று அனைத்திலும் ரொமான்ஸ்
தவிர்த்து ஒரு ‘யு’ செர்ட்டிஃபிகேட் கதை ஒன்றை என் பாட்டி வைத்திருப்பாள். என்ன
அம்மாவை பலர்பாலில் மரியாதையாய் அழைத்து, பாட்டியை ஒருமையில் அழைக்கிறேன் என்று
யோசிக்கிறீர்களா? அவள் என் ஃப்ரெண்டு. என்னோடு குளிப்பாள், குளிப்பாட்டுவாள்,
என்னோடு தான் சாப்பிடுவாள். பாட்டிக்கு ‘லோ பீ.பி.’’ வந்த பிறகு நானும் அவளோடு உப்பில்லாத சப்பாத்தி
சாப்பிடுவேன். அவளோடு தான் உறக்கமும். உறக்கத்தின் போது தான் கதை.
கம்சன் மோசமானவன், இராவணன் கெட்டவன், மஹாபலி
அசுரர் குலத்தில் பிறந்த நல்லவன், கிருஷ்ணன் அவதாரங்கள் – இப்படி பல கதைகள்
சொல்வாள். ஒன்றாக ‘ஓம்.நம சிவாய’’ , ‘ஜெய் ஹனுமான்’’ எல்லாம் பார்ப்போம். எனக்கு கணக்கு சொல்லித் தருவாள்.
பாட்டி எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை.
ஆங்கில பாடத்தில் தோல்வியுற்றாள். கணக்கில் நூறாம். பாட்டி என்னிடம் பொய் சொல்ல
மாட்டாள். வீட்டில் பால் கணக்கு பாட்டி தான் பார்ப்பாள். பத்து பேருக்கு பால்
வாங்குவதற்கு கணக்கு பார்ப்பது பெரிய விஷயம் தான். இறுதி வரை ஒரு ரூபாய் தவறாகப்
போனதில்லை.
என் பாட்டிக்கு வந்த மிகப்பெரிய சோகமும்,
கோபமும் அவளுடைய மூன்றாவது மகன் காதல் திருமணம் செய்து கொண்டது தான். அந்த பெண்
பார்க்க கே.ஆர்.விஜயா போல் இருப்பதாக, என் சித்தப்பா (அந்த மூன்றாவது மகன்)
சொல்வார் என்று சில பெரியவர்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன். இப்போது, கீழே ஹாலில்
கே.ஆர்.விஜயா முகத்தில் ரத்தம் வெற்றிப் போய் அழுதுகொண்டிருந்தாள்.
எங்கள் மரணங்களில் தாரத்தப்பட்டைகள்
இருப்பதில்லை. சங்கு, மணி – எதுவும் இல்லை. அழுகையே அவர்களே அழுவது தான்.
கே.ஆர்.விஜயா ஏன் அழுகிறாள் என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. அவள் என்று, என்
பாட்டி மகனை இழுத்துக்கொண்டு ஓடினாளோ (அப்படி தான் நினைக்கிறார்கள். பழி என்றும்
பெண்ணுக்கு தானே) அன்றோடு என் வீட்டிலிருந்து ஒதுக்கி விட்டார்கள். அவளுக்கு
அம்மிணி எதுவும் செய்யவில்லை. ஒரு சேலை கூட எடுத்துக்கொடுத்தது கிடையாது. பின் ஏன்
மரணத்திற்கு அழுகிறாள்? எனக்குத் தெரியவில்லை. அவளை குடும்பத்தில்
சேர்த்துக்கொள்ளாததற்கு இன்று அழுது தீர்க்கிறாளோ? தெரியவில்லை.
அழுகை – சிரிப்பு போல் ஒரு தோற்று வியாதி அல்ல.
சிரிக்க வைக்க எத்தனையோ கலைஞர்கள் வந்துவிட்ட இந்த காலகட்டத்திலும், அழவைக்க
யாரும் இல்லை. எப்படித்தான் அழுகை வருகிறதோ தெரியவில்லை. அழும் பெண்களைப் பார்க்க
பாவமாய் இருந்தது. தண்ணீர் தர வேண்டும் போல் இருந்தது. பாட்டி இருந்திருந்தாலும்
அவள் சமாதானம் தான் செய்திருப்பாள்; தண்ணீர் கொடுத்திருப்பாள்.
என் பாட்டிக்கு ஐந்து குழந்தைகள். எனக்கு ஒரு
அத்தை. மற்ற நால்வரும் ஆண்கள். என் அப்பா தான் பெரியவர். அத்தை அப்போது திருமணம்
முடிந்து, வடக்கே எங்கோ ஒரு ஊரில் இருந்தார். அன்று, அத்தை மதியம் தான் வந்தாள்.
அவள் நேராய் ஐஸ் பெட்டி அருகே சென்று அமர்ந்தாள். “என்ன நோக்கு அம்மே! என்ன நோக்கு
அம்மே!”” என்று மெல்ல
அழத்தொடங்கினாள். என் அத்தை எனக்கு செல்லம். எனக்கு அவள் அழுவது பிடிக்கவில்லை. “அழாதீங்க’”, என்றேன் அருகில்
சென்று. என் அம்மா என்னை பின்னுக்கு இழுத்து, “கரையட்டே! வெஷமம் மாறான் கரையணம்””, என்றார். துடைப்பதால் கண்ணீர் நின்றுவிடுமா??? அழுதாள்
கவலைகள் தான் தீருமா??? என் அம்மாவுக்கு தெரியவில்லை. பாவம்.
என் பாட்டிக்கு என் அப்பா தான் பெரிய பையன்.
அப்பாவோடு நான்கு பேர் தான் ஆண்கள் உடன்பிறந்தோர். இடுகாட்டிற்கு செல்ல
ஒற்றைப்படையில் ஆண்கள் வேண்டும் என்பதற்காக என்னையும் குளித்து, ஈறன் உடுத்தி
ஸ்மசானதிற்குக் கூட்டிச் சென்றார்கள். என் அப்பா தான் கொள்ளி வைத்தார்.
“திரும்பி
பார்க்காம போங்க”” – வெட்டியான் குரல்.
காவிரி கரையோரமாக இருந்த ஓயாமரி சுடுகாடு ஒரு
நிமிட நிசப்தத்திற்கு பிறகு, குயிலைக் கூவச் சொன்னது. கோட்டான் ஒன்று அலறியது.
இருட்டத் தொடங்கியிருந்தது - நாளும், ஒரு சிலரது வாழ்வும்.
வீட்டிற்கு வந்து குளித்து மாடிக்குச் சென்றேன்.
அத்தை கண்ணீர வடித்துக் கொண்டிருந்தாள்.
“எந்தா?””
“அச்சம்மா...
அச்சம்ம போயி...””, மறுபடி
அழத்துவங்கினாள்.
“கரையண்டா...””, தேற்றினேன்.
“ரொம்ப
கஷ்டப்பட்டாங்க. இல்லே???””
“ஏதோ
எறும்ப கொன்னுருப்பா போல. அதுக்கு தான் இதெல்லாம். சொர்கத்துக்கு தான் போவா...
அழாதீங்க...””
அத்தை கே.ஆர்.விஜயா போல் அல்லாமல், அமைதியாக
அழுதாள். அவளை சற்று நேரம் அழவிட்டேன். அவளே அமைதியானாள்.
அன்று இரவு அந்த ஃபால்ஸ் ரூஃபிங் இல்லாத
கூரையின் கீழே தான் அமர்ந்திருந்தோம். கொசுவை விரட்ட, சிமெண்ட் கலவைக் கலக்கும் சட்டியில்
கணல் இட்டு (சாம்பிராணிக்கு பூஜை அறையில் வைத்திருந்தது) நெருப்பு பற்ற வைத்து,
அதன் மேல் வாசலில் நின்ற வேம்பின் இலைகளை பறித்து இட்டோம். பாட்டியின் சொத்து
திருடிய தம்பி, அவர் மனைவி எல்லாம் இருந்தார்கள். வீட்டிற்கு அருகே என்றோ
விவசாயத்திற்காக வெட்டப்பட்ட வாய்க்கால் ஒன்று, இன்று சாக்கடையாகி இருந்தது. அது
மெளனமாக ஓடிக்கொண்டிருந்தது.
அப்போது ராஜு சித்தப்பா சொல்லிக்கொண்டிருந்தார். “நாங்க வேலை செய்யுற எடத்துக்கு பக்கத்துல
சுடுகாடு இருக்கும். பாத்தா தெரியும். அவ்வளவு பக்கத்துல”, பெருமிதமாக. அம்மா தூங்க சொல்லிக்கொண்டே
இருந்தார்கள். எப்படி உறக்கம் வரும்? நேற்று வரை பத்து பேர் இருந்த வீட்டில் இனி
ஒன்பது பேர் தான். எல்லோருக்கும் சளி; முகம் வீங்கி இருந்தது.
நாளைக்குப்
பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். எல்லாம் முடிந்து விட்டது. என் நினைவில் உள்ள முதல்
மரணத்தில் பாதிக்கப்பட்டோர் என்று யாரையும் சொல்லி விட முடியாது. தாத்தா இருந்ததால்
ரொம்ப தெரியவில்லை. எல்லாம் சாந்தமாகி அடுத்த நாள் பள்ளிக்கும் சென்றேன்.
அந்த அரையாண்டுத்
தேர்வுக்குப் படிக்கவே இல்லை. கவலை இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் காரணம்
இருந்தது. பாட்டி போயிட்டா. தமிழ் மிஸ்ஸுக்கு மட்டும் அந்த காரணம் வேலிட்டாகத் தெரியவில்லை.
பல நாட்கள் வாசலில்
இருந்த அந்த மஞ்சள் நிற பூப்பூக்கும் மரத்தில், பாட்டியின் உடலின் மிச்சம் ஒரு
மண்பானையில் தொங்கிக்கொண்டிருந்தது. அவள் உயிரும் அதிலேயே இருப்பது போல ஒரு துணியை
வைத்து இழுத்துக் கட்டியிருந்தார்கள். ராமேஸ்வரம் சென்று, கடலில் அதை இடும் வரை,
அது அங்கேயே தான் இருந்தது. பதினாறு நாள் அதைப் பார்த்தால் அவள் ஞாபகம் தான்
வந்தது.
எந்த ஒரு மரணம்
நிகழ்ந்த வீட்டிலும் ஒரு குழந்தைப் பிறந்தால், இறந்து விட்டவர்கள் மறுபடி பிறப்பது
போன்று அந்த வீட்டில் உள்ளோருக்கு ஒரு நிம்மதி. அதில் அவர்களுக்கொரு ஆனந்தம்.
அப்படி தான் என் கடைசி சித்தப்பாவிற்கு குழந்தை பிறந்த போது எல்லோரும்
நினைத்தார்கள். அம்மணி அம்மாவே பிறந்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் இந்த
அம்மினிக்கு கம்சனை தெரியாது; மஹாபலியைத் தெரியாது. அவளுக்கு சொல்ல அம்மிணியும்
இல்லை.
இன்றும், எட்டு
வருடங்கள் கழித்து, அம்மிணி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற தருணங்கள் வருவதுண்டு.
அம்மாவுக்காக, அவள் மகிழ்ச்சிக்காக வாழ்ந்த ஒரு சிலர் நிலை எப்படி இருக்கும் என்று
தெரியாது. இரவு உணவு சப்பாத்தியாக இருக்குமாயின், அதை நான் தனியே உண்பேனாயின், அருகில்
என் பாட்டி இருப்பது போல் தோன்றும். குளிருக்காக கம்பளி போர்த்தும் போது, விதுரன்
பற்றி ஆழ்ந்து படிக்கும் பொழுது, வாக்கிங் செல்லும்போது, பி.பி. செக் செய்யும்
பொழுது, கடைசி சித்தப்பா குழந்தையுடன் பேசும்போது – அம்மணி எங்கள் மத்தியிலே தான்
வாழ்கிறாள்.
மரணம் என்பது என்றானாலும் இந்த மலம் நிறைந்த உடலிலிருந்து அழுக்கற்ற ஆன்மாவுக்கு விடுதலை தானே?
ReplyDeleteதுடைப்பதால் கண்ணீர் நின்றுவிடுமா??? அழுதாள் கவலைகள் தான் தீருமா???
Intha varigal pidichirunthathu
Nadula chutni ya pathi solli sirikkavum vechitta - un trademark...
En pattinga nyabagam vandhanga.. Vazhthukkal
என் வாழ்வில் நினைவு தெரிந்து பின் நான் பார்த்த முதல் மரணமும் இதே போன்ற ஒரு சூழல்தான்.. எனக்கு ஆச்சி.. இன்றும் என் வாழ்வின் மறக்க முடியாத நாள்.. இந்த இடுகை அந்த நாளின் நினைவுகளை மெதுவாகக் கூடவிழ்த்து விடுகிறது... நீ சொல்வது போலவே கதை கேட்டு வளர்ந்தவன் நான்.. இன்றும் நிலவைப் பார்க்கையில் என் அம்மிணி என்னுடன் இருப்பதாய் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.. பௌர்ணமியில் போனவள் அவள் !
ReplyDeleteஒரு துக்க வீட்டின் யதார்த்தத்தையும் அந்தக் குடும்பம் சார்ந்த கலாசாரத்தையும் அற்புதமான எளிமையோடும் ஆழ்ந்த கவனிப்போடும் பதிவு செய்திருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்..
@Ramanan: Thanks da for the support. :-)... You have been a good supporter. I'm lucky.
ReplyDelete@GS: mikka nandri guruvae!!! :-)... Will do more, as and when I could...
அருமையான பதிவுடா. நான் சென்ற முதல் துக்க வீடும் என் பாட்டியினுடையது தான்.
ReplyDeleteஅம்மணி எங்கள் மத்தியிலே தான் வாழ்கிறாள். - உண்மை.
:-)... Thala, nandri. romba. neeenga illa na, naanga illa..
DeleteRomba nalla iruku da.. Neraiya nyabagatha ezhuthu vituta...
ReplyDelete:-D.. Thanks for coming here nna. idhaana mudhal murai???
DeleteNjabagangal idhai padippadhaal varudhu na, nalladhu dhaanae??? keep coming back.
good da... ur writings are day by day becoming like a professional da... all the best ....
ReplyDeletethanks deepak. Your support has helped me largely to write this after a lot of months. Continuous questions about writing. Thanks for the best support you gave. A lot...
Deleteரொம்ப நல்லா எழுதிருக்க ...மிகவும் பிடித்தது ..வாழ்த்துக்கள்
ReplyDeleteRaghu, my eyes were little wet...as I read..! I admire 'Ammini' and appreciate your writing!
ReplyDeleteRomba super Raghunath, nalla tamil, sonna vidham, periya vishaiyangalai sinna varigalil arpudhama solliyirukke....congrats!!! Keep writing....padicha mudichappa ennoda kangal niranchiruchu...appadi oru yadhaarthamaana nadai....innum ezhudhanum.....
ReplyDeleteEnna ku enna achu nu therila... etha padikum pothae azhukaiya vanthuduchu.... Ennoda thatha patti in maranam neyabakathuku vanthuduchu.... Ore nallil irruvaraium ellantha thurbakkiavathi naan... Eppo puriuthu ellar vazhkaila um avangaloda thatha patti in maranam... ORU EDDUKODUKKA MUDIYATHA ELLAPPU YENDRU...
ReplyDeleteUnn Varikal Azhamannavai... azhuthamannavai... thodarthu sei... valthukkal da :)
உங்கள் தமிழுக்கு நன்றி....
ReplyDeleteBeautiful... Very Professional Machi....
Hats off for the following lines:
1. அந்த அரையாண்டுத் தேர்வுக்குப் படிக்கவே இல்லை. கவலை இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் காரணம் இருந்தது. பாட்டி போயிட்டா.
2. மகாபாரதம், ராமாயணம் என்று அனைத்திலும் ரொமான்ஸ் தவிர்த்து ஒரு ‘யு’ செர்ட்டிஃபிகேட் கதை ஒன்றை என் பாட்டி வைத்திருப்பாள் ---------- அம்மணி அம்மாவே பிறந்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் இந்த அம்மினிக்கு கம்சனை தெரியாது; மஹாபலியைத் தெரியாது.
Kalki theriyuraaru ;) - காவிரி கரையோரமாக இருந்த ஓயாமரி சுடுகாடு ஒரு நிமிட நிசப்தத்திற்கு பிறகு, குயிலைக் கூவச் சொன்னது. கோட்டான் ஒன்று அலறியது. இருட்டத் தொடங்கியிருந்தது - நாளும், ஒரு சிலரது வாழ்வும்.
Keep Going....
Arumai raghu...
ReplyDeleteJust arumai. Nothing else.
எனக்கு பாட்டி இருந்தும் கதை சொல்லி வளர்க்கவில்லை.... இப்போது தோன்றுகிறது, கதை கேட்டிருக்கலாம் என்று....அருமையான தமிழ் நடை.... வாழ்த்துக்கள்...
ReplyDeleteசாதாரண நிகழ்வை கூட உங்கள் ஒப்பனைகளால் அழகாக தெரிந்தது நா :-) :-) #அருமை
ReplyDelete