Wednesday, April 11, 2012

கெட்ட வார்த்தை“எனக்கொரு சந்தேகம்”
“கேளேன்???”, புன்னகையுடன் அவள்.
“பொண்ணுங்க எல்லாம் கெட்ட வார்த்தை பெசுவாங்களா???”
“ம்…”, யோசிப்பது போல் பாவனை செய்தாள். “சிலர்…” என்று இழுத்தாள்.
“உனக்கு தெரிஞ்சு???”
“ஆங்ங்??.. நல்ல கேள்வி.. இதுக்கு பதில் சொல்வேன் னு நீ நெனக்குறியா?”
சிரித்தேன். ‘சொல்ல முடியாது‘ என்பதை எனக்கு வலிக்காமல்எவ்வளவு அழகாய் சொல்லி விட்டாள் இவள். என் தோழி. தேன்மொழி.
மாநிறம். சற்றே உயரம, ஒற்றை ஜடை, ஒக்கேஷனலி மல்லிச்ச்சரம் ஏறும் கூந்தல், பெரிய கண்கள்… பெண்ணுக்கு இலக்கணம் இல்லை, என்றாலும் பெண் என்ற பிரிவினையுள் அடங்கும் வண்ணம் அழகாய்…
“சரி அதிருக்கட்டும்… ஒன்னு கேக்கணும்…”
“கேளேன்??”, புன்னகைத்தாள். அவள் ‘கேளேன்’ என்பதில் ஒரு அழகு உண்டு. அந்த ‘க’கரத்தை சற்றே அழுத்தி, ‘ஏ’காரத்தை இழுத்து, ‘ன்’-ஐ ‘ங்’ ஆக்கி, ‘க்கேஏளேங்’ என்பது போல் ஒலிக்கும்.
“உனக்கு கெட்ட வார்த்தைகள் ஏதாவது தெரியுமா?”
சிரித்தாள். புன்னகைத்தாள்… வெட்க்கப்பட்டாள்…
“நான் லாம் பேச மாட்டேன் பா”, என்றாள். அந்த ‘பா’ – முன்னிலை ஒருமையாய் ஒரு புதிய ஆண்-பெண் நட்பில் வரும் ‘பா’ அல்ல. யாரோ, மூன்றாவது மனிதனிடம் சொல்வது போல் அமைந்த ‘பா’. என்னை குறி வைத்து ஒரு சண்டையின் போது மூன்றாவது மனிதனிடம் சொல்வது போல் சொன்னாள்…
“நீ பேசுவியா னா கேட்டேன்??? உனக்கு தெரியுமா?”
“அதெல்லாம் சொல்ல முடியாது…”
“என்கிட்டே சொல்றதுக்கென்ன???” இது என் ஆயுதம். அவள் சரெண்டர் ஆகி விடுவாள் இப்படி கேட்டால்.
“அட போடா நீ வேற!”
“ஸ்கூல்-ல யே  தெரிஞ்சுருக்குமே??? உண்மையா சொல்லு”
“பேசுவாங்க… எனக்கும் தெரியும்.. தி வீ….”, தயங்கினாள்.
“தி???”
“தி வீடியோ மேன்… இத வேகமா சொன்னா, ஒன்னு வரும் ல? அது ஸ்கூல் ல பிரபலம்”, அவள் படித்தது பெண்கள் மேல் நிலை பள்ளி என்பது குறிப்பிட தக்கது.
“ஓஹோ! எது?? அந்த வார்த்தையா???”
“இல்ல… இப்படி சொன்னா, அப்படி வரும்… அது கெட்ட வார்த்த அப்டிங்கறது”
நான் சிரித்தேன். அவள், அவள் கன்னத்தில் விழுந்த சில முடிகளை எடுத்து காதிற்கு பின்னால் சொருகிக் கொண்டாள். தேநீர் கோப்பையை எடுத்து, ஒரு முறை தேநீரை ‘ஸ்ர்ர்ர்ர்’ என்று இழுத்தால். ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள்.
“என்ன யோசிக்கிற?”, அவள் யோசிக்க ஆரம்பித்தால் ஏதோ விபரீதம் நடக்க இருக்கிறது என்று அர்த்தம. எந்த பெண் யோசித்தாலும் அப்படித்தான். அதனால், சிந்தனையை கலைத்தேன்.
“இல்ல… ஏன் அப்படி ஒரு தொழில்?”
“எப்படி?”
“தி வீடியோ…”, இழுத்தாள்.
“சுஜாதா-வோட ‘எப்படியும் வாழலாம்’ சிறுகதை படிச்சதில்ல???”
“”இல்லை… யேன்???”, அவள் ‘ஏன்’ என்று கேட்க மாட்டாள். ‘யேன்’ என்பாள்… கேட்கவே யேதோ போல் இருக்கும்.. சிலிர்ப்பாய்…
“உனக்கு கம்ப்யூட்டர் பத்தி தெரியுது. அவங்களுக்கு அது தான் தெரியுது. அப்படி ஒரு தொழில்”
“இது ஒரு ஜஸ்டிஃபிகேஷனா?”
“ஜஸ்டிஃபிகேஷன் இல்ல. ஆனா, அப்படி பார்க்க போனா, சரி தானே?”
“என்னமோ… எனக்கு தெர்ல”
மீண்டும் தேநீர் இழுத்தால். அவள் கண்கள் எதையோ கேட்க தயங்குவது போல் இருந்தது.
“என்ன? கேளு…”, நான் சொன்னேன்.
அவளுக்கு தெரியும், நான் கண்டுபிடித்து விடுவேன் என்று.
“அதில்ல… ஏன் ஆண்கள் அங்க போகணும்??? அப்படி என்ன அவுங்களுக்கு அப்படி ஒரு அடக்கிக் கொள்ள முடியாத ஒரு …”
வெற்றிடம்…
கேட்டுவிட்டாள்…
நான் தேநீர் கோப்பையை எடுத்து ஒரு இழு இழுத்தேன். ‘சரி காமெடியாவே அப்ரோச் பண்ணுவோம்…’, மனதில் நினைத்து கொண்டேன்.
“மனைவி திருப்திபடுத்தலைனா போவாங்க… இப்போ, உன் கல்யாணத்துக்கப்றம்…”, சிரித்து கொண்டிருந்த கண்கள், முறைத்தான.
“ம்… சொல்லு”, அதிகாரமாய் சொன்னாள்.
“..உன் கணவனும் போகலாம்… நீ…”
“எங்கே???” கேள்வியுடன், என் பேச்சை நிறுத்தி, முறைப்பின் காரத்தை கூட்டினாள்.
“ப்ராஸ்டிட்யூட் கிட்ட”
ஆங்கிலம் எவ்வளவு அழகிய ஒரு ஆயுதம்! எவ்வளவு கேவலமாம் வார்த்தையையும் அழகாய் சொல்லும் படி இருக்கின்றது?!?
“ஓஹோ! அப்ப பெண்கள் லாம் என்ன செய்றதாம்???”
“தெரியல…”
“அவுங்களுக்கெல்லாம் எதிர்பார்ப்பு இருக்காதா???”
“அதிகமான எதிர்பார்போட இருக்கிறது பெண்கள் தான்…”
“ஆமா.. எதிர்பார்ப்பு அதிகமா தான் இருக்கும். இந்த வசதி எல்லாம் இல்ல பாருங்க!”
பாருங்க-வில் வந்த ‘ங்க’ மரியாதை அல்ல. கான்வர்ேஸஷனில், பலபோதும் ஆண்களிடம் பொதுவாக ஏதேனும் சொல்ல விழைந்தால், இப்படி தான் சொல்வாள்.
சிறு மௌனம் நிலவியது.
அவளே அம்மௌனத்தை கலைத்தாள்.
“ஆமா… ப்ராஸ்டிட்யூட் கிட்ட போறாங்களே, அவுங்கெல்லாம் அப்டினா மேல் ப்ராஸ்டிட்யூட்ஸ் தானே?”
என் தேநீர் கோப்பையை எடுத்து தேநீரை இழுத்தேன். காலி ஆகி இருந்தது. காற்றை இழுத்தேன்.
அவள் கேள்வியின் உறைப்பு இப்பொழுது தான் மூளையில் மெதுவாக இறங்கியது.
“ஆமா… இல்ல.. தெரியல… இருக்கலாம்…”, உளறினேன். உரக்க சிரித்தாள். அந்த கடையில் இருந்த இருவர், திரும்பி என்னையே பார்த்தார்கள்…
பில் பே பண்ணிட்டு வெளிய வந்தோம்.
“நான் வேற யார்ட்டயும் இப்படி பேசுறதில்ல”, நான்…
“ஆமா, நாங்க தெனமும் ஒரு நூறு பேர்ட பேசறோம்… போ ல..”

“என்னமோ… யார்க்கு தெரியும்…”, நான் முன்னால் ஓட, அவள் துரத்திக் கொண்டு வந்தாள்.