Monday, November 12, 2012

வாசகனாவது சுலபம்

உறவுகள் கசந்துபோன ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிதறுண்ட குடும்பத்தின் கதையே நம் காலத்தின் அடையாளம்.

இப்படி முன்னுரை எழுதி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, என்னை வாசிக்க வைக்கிறார் எஸ்.ரா. "புத்தனாவது சுலபம்"  எங்களுக்குள் - அதாவது எனக்கும் Siva வுக்கும் இடையே - ஒரு ஃப்ரேஸ்ஸாக இருந்தது. விவரிக்க முடியாத இடங்களில் ஒரு நிரப்பியாக பயன்படுத்திக் கொண்டிருந்தோம். சிரிப்பிற்கும். சோகத்திற்கும்.



இந்த புத்தகத்தின் முதல் கதை சிறப்பு. ஒரு பெண்ண போலீஸ், அவளுடைய வாழ்க்கை; ஒரு நாள் கதை. மேஜிக் போல சொல்கிறார் எஸ்.ரா. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னால் எழுதிட முடியாது என்று நினைத்த ஒரு வகையறா கதை அது. பெண்களின் கஷ்டம் பற்றியும், கூட்டங்களில் இருக்கையில், ஒரு நான்கு பேர் கூடி நிற்கும் இடத்தில் பீரியட் வரும்பொழுது ஏற்படும் மனோமாற்றங்களையும் அழகாய் எடுத்து சொல்லுகிறது இந்த கதை.

இரண்டாவது தான், "புத்தனாவது சுலபம்". படித்துவிட்டு Siva விற்கு கால் செய்தேன். என் மொபைலில் அறுபது பைசா பாலன்ஸ் இருந்தது. சிவாவை அழைத்து எனக்கு அழைக்கும் படி சொல்லி இந்த கதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். மணி இரவு பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. அந்த கதை என்னை அவ்வளவு பாதித்திருந்தது. அருமையான கதை. எந்தவொரு வீட்டிலும் இருக்கும் கதை. அதனாலேயே மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாக:
-->பைக் ஓட்டுனா தப்பா என்ற கேள்விக்கு இன்றைக்கும் என்னிடம் சரியான பதில் இல்லை
-->பையன்களுக்காகப் பொய் சொல்வதை அம்மாக்கள் விரும்புகிறார்கள். அது ஒரு சதி
-->இந்த உலகில் காதலைத் தவிர வேறு எதர்க்காவது பையன்கள் இப்படி உருகி உருகிக் கதறுவார்களா என்ன. அப்படி என்ன இருக்கிறது காதலில். (இவரது காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது)
இப்படியாக ஒரு தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள அந்த நெருக்கத்தையும், தூரத்தையும் அசாத்தியமான இயல்புடன், நடப்பதை அப்படியே ஸிம்பிளான தமிழில் கூறுகிறார் எஸ்.ரா.

மூன்றாவதாக இருந்த கதையை பற்றி சொல்லும் முன்... எஸ்.ரா கடல் பற்றி எழுதியிருப்பதை வாசித்தவரா நீங்கள்??? அப்படியானால், உங்களுக்கு அது பிடிக்குமா??? அவருடைய கடல் பற்றி எழுதும் நேர்த்தியை கண்டு வியப்படையாதவரா நீங்கள்??? இல்லையெனில், நீங்கள் இன்னும் அவர் எழுத்துக்களை நிறைய படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். "யாமம்" படித்த பிற்பாடு ஏனோ எஸ்.ரா எழுதும் கடலை படிக்கவே ஆசையாக உள்ளது, கடற்கரைக்கு போவதை விட. இந்த "பெண் என்று எவருமில்லை" என்ற சிறுகதை அப்படித்தான். கடலைப் பற்றிய எழுத்திர்க்காகவும், ராபி என்ற கதாப்பாத்திரமும் என்றும் என் மனதில் நிற்பவை. என் மனதில் என்றல்ல. யார் மனத்திலும்.

அடுத்ததாக, தமிழக இலக்கியத்துக்கு அதிகம் பழக்கப் படாத, ஐரோப்பிய வரலாறு சார்ந்த கதை. எனக்கிது மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. "தண்டனை முடிவு செய்தபிறகு அதை நிறைவேற்ற காரணம் தேடுவது தானே அதிகாரம்" - பட்டாசு. ப்ருனோ பற்றி விக்கிபீடியாவில் பார்த்ததே இந்த கதையைப் படித்த பின்னர் தான். இது ஒரு ஐ-ஓப்பனர். நல்ல விவாதம். மதம் எப்படி அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தடையாக இருந்தது என்பதர்க்கான ஒரு எடுத்துக்காட்டு. இந்த கதையில் வரும் அனைத்தும் வரலாறு ரீதியாக உண்மையே. இறுதியாக ப்ருனோ இவர் தான் என்றொரு பின்குறிப்பு போல எழுதியிருப்பது, சிரிக்க வைக்கிறது.

"ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப்" - என் ரேட்டிங்கில், இந்த புத்தகத்தில் நம்பர் டூ வில் இருப்பது. கதை சொல்லும் போது, கேட்கிறவனுக்கு கடுப்பு வரக்கூடாது. கேட்பவன் மனம் திறந்து, கதையை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்படிப் பட்ட ஒரு கதை. நீங்கள் நினைத்து பாருங்கள். உங்கள் வீட்டிற்கு உங்கள் சகோதரனின் தோழனோ யாரோ வருகிறார்கள். அவன் உங்கள் வீட்டை நன்றாக சுத்தம் செய்து, உங்கள் துணிகளைத் துவைத்து, எல்லாம் சுத்தம் செய்து, உங்களோடு பேசி கலையில் ஏதோ அன்றாட செலவுக்கு எதையோ திருடிச் செண்டு விடுகிறான். அப்படி இருந்தால், எப்படி இருக்கும்??? ஆடு போன்ற ஒருவன் தான் அஷ்ரப். அவனுக்கு வெட்கம், மானம் எல்லாம் கிடையாது. அவன் இப்படியே அலையும் ஒருவன். இந்த கதை மூலம், நாம் ஒவ்வொருவரும் இருக்க விரும்பும் ஒரு மனிதனை போல அஷ்ரஃபை சித்தரிக்கிறார். அருமையான கதை.

"ஜெயந்திக்கு ஞாயிற்றுகிழமை பிடிப்பதில்லை" - ஒரு சைவப் பெண் காதல் திருமணம் செய்து கொள்கிறாள். அவளுடைய கணவன் வீட்டில் ஞாயிற்றுகிழமை அசைவமின்றி அஸ்த்தமிப்பதில்லை. இந்த கதையின் வேடிக்கை என்னவென்றால், காதலிக்கும் போது பெரிதாய் தெரியாத பல விஷயங்கள், திருமணதிற்கு பின் மாறி விடுகிறது என்பது தான். எழுத்தாளரும் அதை தான் சொல்ல விரும்புகிறார். பெண் எவ்வளவோ த்யாகங்கள் செய்கிறாள் ஒரு திருமண வாழ்விற்காக என்பதையே சொல்லி இருக்கிறார். இது விகடன்-இல் வெளிவந்தபோது, பிரபு சொன்னார், "நல்ல கதை. இப்டி ஒரு கான்செப்ட்-அ எடுத்து எழுதியிருக்குராறு பாரேன்" என்று. சரி தான். அதில் அசைவம் என்பதை விட, காதலுக்கு முன், கல்யாணத்திற்குப் பின் என்ற அந்த சிந்தை - அருமை. சத்யப்ரபா அவர்கள் நான்-வெஜ் ஓ என்னமோ???

மற்ற சிறுகதைகள் எல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. "சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன்சிங்கைப் பிடிக்காது", என்ற கதை ஒரு ஹாஸ்ய நடையில் எழுதப்பட்டிருந்தது. சிரித்தேன்.

ஏனோ, "பொய்த்தொண்டை", "நடுவில் உள்ளவள்", "சொந்தக்குரல்", "சிற்றறிவு" - இந்த கதைகள் எல்லாம் நன்றாக இருப்பினும், வெகுவாக பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதில் எல்லாம் எதோ ஒரு சமூஹ சிந்தனை, குடும்ப பிரச்சனைகள் எனப் பல விஷயங்கள் இருக்கின்றன. நல்ல கதைகள் தான். நீங்கள் படித்து பாருங்கள், உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்கும்.

'சிறுமீன்' என்ற குறுங்கதை எனக்கு நிஜமாக புரியவில்லை. ஒரு பக்கம் தான் கதை. அதை தான் முதலில் படித்தேன். அப்பீலிங்காக இல்லை. நீதி சொல்கிற கதை போல...

"கொகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது" - ஆசிட் ஊற்றப்பட்ட முகம் கொண்ட ஒரு பெண்ணின் மனதிலிருந்து எழுதப்பட்டிருக்கும் இந்த கதை, நேர்த்தியாக இருந்தது. இயலாமையின் முழு வடிவமாக கொகிலவாணியைச் சித்தரித்திருக்கிறார். நல்ல எழுத்து, நல்ல நடை. ஆனால் பயத்தின் சின்னமாகவோ, கொடூரத்தின் உண்மையாகவோ இது நம் மனதில் பதிவதால் மறக்கவே நினைக்கிறோம் இக்கதையை.

இறுதியாக சீட்டாட்டம். இந்த கதையும் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. அவர் எதையோ உவமையாக கூற விரும்புகிறாரா, இல்லை எனக்கு புரியும் மச்சூரிட்டி இன்னும் வரவில்லையா என்று எனக்கு புரியவில்லை.

இப்படியாக இந்த சிறுகதைத்தொகுப்பு அற்புதமான கதைகளைக்கொண்டது. சாஹித்ய அகாடமி விருது எஸ்.ரா விற்கு இதற்காக கொடுத்துவிடாதீர்கள். ஏற்கனவே பாவேந்தருக்கு நாடகத்திற்கும், கவியரசுக்கு புதினத்திற்கும், கவிப்பேரரசுக்கும் புதினத்திற்கு கொடுத்தது போதும். எஸ்.ரா. கதை சொல்கிறார் அற்புதமாக. ஆனால் அவரின் கட்டுரைத்தொகுப்பிர்க்கு இது ஒரு ஈடு அல்ல.