Thursday, August 21, 2014

விடை


உனக்கொரு முத்தம் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்,
கண்ணீர் வழிய வழிய, உதடுகள் நனையும் போது
உன் கன்னத்தை என் கண்ணீரால் ஈரமாக்கும்
ஒரு புனிதமான முத்தம்.

இந்த முத்தத்தில் காமம் இருக்காது.
சத்தமும் இருக்காது.
இது ஒரு இறுதியை குறிக்கும்.
சலனமற்ற ஒரு முத்தம்

மின்சாரம் இல்லாத கிராமத்தின் நடுவே
தனியே நிற்கையில்
தூரத்தில் தெரியும் விளக்கை
காற்றோ மனிதனோ அணைக்கும் போது 
உணர்ந்திருக்கிறாயா நீ
யாருமற்ற ஒரு வெறுமையை

ஒரு குகைக்குள் மாட்டிக்கொண்ட தனி மனிதன் போல...
"தண்ணீர் கொடு" என்று கேட்கும் உலகின் கடைசி மனிதன் போல...
தனிமையை அறியாத ஒருவனின் தனிமை...
அது
இந்த முத்தத்தோடு முடிகிறது.

இழப்புகளை கண்டுகொள்ளாமல், சேமித்து வைத்த
இந்த முத்தத்தின் விலை எண்களில் அடங்காது.

அள்ளி அணைத்து இழுத்து என்றெல்லாமின்றி
அப்படியே நிற்கையில் உதட்டை உரசிப்பார்த்து
கண்ணீரை உன் கன்னத்தோடு பகிர்ந்து
எந்த நட்டமும் வராமல் சென்றிடுவேன்.

உன் கனவுகளில் வரமாட்டேன். 
எனக்கு என்ன நடக்கும் என்ற பயம் 
உனக்கினி வரவே வராது.

இந்த முத்தத்தால் 
அனைத்தையும் கரைத்து
காற்றோடு கரைந்து விடும் -
ஒரு மிச்சத்தையும் விட்டு செல்லாமல்
உன் கன்னத்தில் பதிந்த நீர்த்துளி

கடைசியாக இதை சொல்வேன்:
உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே.

என்னுடையதாய் இருந்தால் திரும்பி வரும் பட்டாம்பூச்சி
என்றேனும் வந்தால், விரல் மேல் இடம் கொடுப்பேன்.
இருப்பதும் பறப்பதும் 
பட்டாம்பூச்சிக்கு தெரியாதா என்ன?