Sunday, January 8, 2012

இப்படியும் ஒரு கதை...



"வாப்பா"

"வேணாம்ணே...", ஒரு மாதிரி சிரித்து கொண்டே சொன்னான்.

நான் மேஜை மேல் நிர்வாணமாக அமர்ந்திருந்தேன். எனக்குள்ளே ஏதோ வெப்பமாக உணர்ந்தேன்.

"வேணாம் தலைவா...", இன்னொருவனும் மறுத்தான்.

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் வந்தவன் தலைவன். இருவர் தொண்டரென்று நினைக்கிறேன். எங்கள் அருகே வருவதற்கு பயந்து நின்றார்கள். சட்டென தலைவர் என் பக்கம் வந்து, என் உடலை வளைத்து பிடித்து, உதட்டருகே கொண்டு சென்று, மெதுவாக முத்தமிட்டார். ஒரு சில முத்தங்களுக்கு பிறகு, வியர்வை சிந்த தலைவர் காசு கொடுத்துவிட்டு நகர்ந்தார். அன்று தான் எனக்கு முதல் முறை. தேதியும் கூட நினைவில் உள்ளது. நவம்பர் 4. அப்போது நல்ல குளிர் காலம். எனக்கும் நல்ல டிமாண்ட். ஒரு நாளைக்கு எட்டு பத்து முறையாவது... என்னுடன் அந்த கூட்டத்தில் ஒரு முப்பது பேராவது இருந்திருப்பார்கள்.


ஒருமுறை ஒருவர் என்னை தீண்டி ரசித்தால் குளியல் எனக்கு மிக முக்கியம். எங்களுக்கான நீச்சல் குளம் ஒன்று அமைத்து கொடுத்திருந்தார் எங்கள் முதலாளி. அதில் அடிக்கடி தண்ணீர் மாற்றம் செய்வார்கள். சில நேரம் வெதுவெதுவென சுடுத்தண்ணியம் கிடைக்கும். அன்றெல்லாம் குஷிதான்.


என்னை நாடி பலதரபட்ட மக்கள் வருவதால் எனக்கு நெறைய விஷயங்கள் தெரியவும் வந்தது. ஐ.டி. (I.T) கம்பெனி முதல் அரசியல் வரை. சிவில் கான்ட்ராக்டில் இருந்து விளையாட்டு வரை.


விளையாட்டு என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது. அன்றைய தினம் நான் மறக்கவே மாட்டேன். அன்று நவம்பர் 26.மேற்கு இந்திய தீவுகள் அணி இந்திய சுற்றுபயணம் மேற்கொண்டு இருந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள்... 'டிரா' வாக முடிய இருந்த ஆட்டத்தில் அஸ்வின் என்ற தமிழக பந்து வீச்சாளர் கலக்க இந்தியா பக்கம் வீசியது காற்று. அன்று ஒரு மூன்று மூன்றரை நேரம். மதியம். மதியம் ஒரு பையன் வந்தான். அவன் என்னை ரசித்தாநா என்றே என்றே சந்தேகம். எனக்குள் இருந்த வெப்பத்தை உணர்ந்தானா என்றே தெரியவில்லை. ஓரிரு முத்தங்களிட்டான். திடீரென்று அவன் தொலைபேசியில் எஸ்.எம்.எஸ். டோன் அடித்தது. "ச்ச... கோஹ்லி அவுட்... நாம தொதுடுவோம் போலயே!", என்று புலம்பி கொண்டே, என்னை விளக்கினான். ஓனரிடம் காசு கொடுத்துவிட்டு, "மேட்ச் பரபரப்பா போகுதுண்ணே. பொறவு வாரேன்" என்று கூறிவிட்டு சென்றான். அவனுக்கு ஒரு 21 வயதிருக்கும். எத்தனை வயதானாலும், அரைகுறையாய் முடிந்தாலும் குளித்ததாக வேண்டும். உள்ளிருந்த வெப்பத்தை அந்த நீராடல் தணிக்கும். ஃப்ரெஷ் ஆக்கிவிடும்.


அன்று இருவர் வந்தனர். என்னை ஒருவன் எடுத்துகொண்டான். ஒன்றுமே செய்யவில்லை. நாற்காலி மேல் என்னை நிர்வாணமாக அமர்த்தினான். சும்மா உட்கார்ந்திருக்கும் என்னை பார்க்க அவனுக்கு என்ன ஆசையோ! சில காகிதங்களில் கையெழுத்திட்டான். "உங்களுக்கு வேண்டுமா?" என்று இன்னொருவனிடம் கேட்டான். எனக்கு எரிச்சலாக இருந்தது. 'இவன் யாரடா இவன், என்னை வாங்கிக்கொண்டு அவனிடம் வேண்டுமா என்று கேட்கிறான்', என்று. நல்ல வேளையாக,"வேண்டாம். அடுத்த முறை பாத்துக்கலாம்", என்றான். "பேபெர்ஸ் லாம் கரெக்டா இருக்கா-னு ஒரு தடவ பாத்திடுங்க" என்றான் இவன். எனக்குன் இருந்த வெப்பம் தணிந்திருந்தது. என்னை எடுத்து அவன் ஒரு நீண்ட முத்தமிட்டான். அவன் உதடுகளை அவனே நாக்கால் தடவிக்கொண்டான். நான் குளியலுக்காக குளத்தில் தள்ளப்பட்டேன்.


இந்த குளியல் தான் எவ்வளவு சந்தோஷமான ஒரு வேலை? ஒரு சில நேரல்மேல்லாம் அடுத்த கஸ்டமர் எனக்காக வரும் வரை குளித்து கொன=தே இருப்பேன். சில நேரம் உலர்திக்கொள்ள வேண்டியிருக்கும். சில சமயங்களில், ஒரே ஒரு உதறல் தான். எல்லாம் சரியாகிவிடும். இரவில் எனக்கு கஸ்டமரே கிடையாது. எங்கள் பிசினெஸ் ஆரம்பமாகி, ஒரு நான்கு மாதங்கள் ஆகின்றன. இனி கோடை காலம். கஸ்டமர்கள் குறையும் காலம். வெயிலினால் நிறைய பேர் வர மாட்டார்கள். ஆனால், வெயிலின் உக்கிரத்தை குறைக்க குளியல் வேண்டும்.


இப்படியே போய் கொண்டிருந்த என் வாழ்வில், நேற்று அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு ஆட்டோக்காரன் வந்தான். என் உடலை வளைத்து பிடித்து கொண்டான். என்னை அவன் உதடருகே கொண்டு சென்றான். முத்தமிட்டான். எனக்குள்ளிருந்த வெப்பம் அவன் மேலுதடை சுட்டது. சட்டென்று என்னை விடுவித்தான்.  நான் கீழே விழுந்தேன். என் மேல் பாகம் உடைந்து போனது. உள்ளிருந்த இஞ்சி-டீ சிந்தியது. என்னை கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரல் கும் இடையில் பிடித்து, ஓனர் ஒரு ஓரமாக வைத்தார். கீழே சிதறி கிடந்த கண்ணாடித் துண்டுகளை எடுத்து ஓரமாய் எறிந்தார். ஆட்டோக்காரன் "ஸாரி" என்று கூறிகொண்டே தலையை சொறிந்தான். ஓனர் அவனையே பார்த்துகொண்டிருந்தார். இனி குளியல் இல்லை!!!