Friday, November 15, 2013

நினைவுகளை மறப்பவன்

காலை நான்கு மணி இருக்கும் உன்னை தேட ஆரம்பித்த பொழுது. நியான் விளக்குகளுக்குள் அமர்ந்து கணினி திரையை நான்கு மணி நேரம் பார்த்தவனுக்கு கசக்கிக்கொண்டு கண்களை திறக்க வேண்டாமல் தூங்க தோன்றி சில நிமிடங்கள் ஆகி விட்டன.

தேடுதல் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருள் இருப்பதை சொல்லித்தந்ததே நீ தான். இங்கே தான் இருக்கிறாய் என்றில்லாமல் இருக்கும் ஒருவரை, நினைவால் தேட யார் பழக்கி விட்டார்கள் என்று தெரியவில்லை. நினைவுகளால், தேவைகளால் வார்த்தைகள் உருவானதா? இல்லை வார்த்தைகளுக்காக தேவைகளா??? செயல்களைத் தூண்டுவன சொற்களா? இல்லை, செயல்கள் மூலம் சொற்கள் உருவானதா?

பயம் அப்படித் தான். அடி. அப்படி தான். யாரையும் அடிக்காமல் வளரும் குழந்தைக்கு அடி என்ற விஷயத்தை அறிமுகம் செய்வதே நாம் தான். அடி என்ற பதம் தெரிந்ததால் செயலா? இல்லை, செயலால் அந்த பெயரா? வன்முறை ஆரம்பத்தில் இருந்ததா? கீழே விழுந்த குழந்தையை உற்று கவனித்திருக்கிறாயா? யாராவது கத்தினாலோ, ‘ஐயோ’ என்றாலோ தான் அது பீறிட்டு அழும். அழாதே என்று சமாதானம் செய்யும் வரை. விடு இந்த விவாதம் நமக்கெதுக்கு?

நியான் விளக்கில் உட்கார்ந்திருந்தேன். நேற்று தான் சித்தப்பா அழைத்தார். உன்னை விட சிறந்த ஒருவரை சந்திக்கவில்லை என்றேன். பிரதியை வைத்துக்கொண்டு, இது போன்ற ஒன்று வேண்டும் என்று அலைந்தால் நடக்காது. புதியதாய், எல்லா கோட்டையும் அழித்து ஒன்றிலிருந்து தொடங்க சொன்னார். இதுவும் நமக்கிப்போது தேவை இல்லை தான்.

சிறப்பாக இருந்தால் கட்டிக்க வேண்டுமா என்ன? “சின்னட்டுப் பசங்க” – இதால் ஆனது தான் சமூகம். அணுவோ, மூலக்கூறோ கொண்டு அமைக்கப்பட்டது என்று இயற்பியல் நம்மை ஏமாற்றத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகி விட்டன. நானும் இருபத்துமூன்று வருடங்கள் ஏமாறி இருக்கிறேன்.

அந்த நியான் விளக்கில் விட்டேன் அல்லவா? உன்னை தேட தொடங்கியது மனம். காமத்தேவைகளை கைபேசியிலேயே தீர்த்துக்கொள்ளும் அளவிற்கு உலகம் வளர்ந்துவிட்டது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. எல்லாம் கைபேசியிலேயே செய்துவிடலாமாம். தேடியது அதற்க்கல்ல. உன்னை பார்க்க வேண்டும் போல இருந்தது. காலை நான்கு மணிக்கு பேச யாருமற்று, கணினி திரையை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். விடிந்தால் வீட்டுக்கு பொய் விடலாம்.

கீழே சக்கரங்களுடன், எளிதில் இழுத்துசெல்லக்கூடிய நாற்காலி. அது தான் அலுவலகமெங்கும் நிறைந்து இருக்கும். ஒரு சிலது பின்னால் சற்று நீளமாக இருப்பதால் நன்றாக சாய்ந்து கொள்ளலாம். அதிலும் கீழே ஒரு நெம்பி ஒன்று உண்டு. அதை நகர்த்திக்கொண்டால், செமி ஸ்லீப்பர் பேருந்தின் இருக்கை போல ஆகி விடும். இதையெல்லாம் இப்போது எதற்கு சொல்கிறேன். உன் நினைவு தான் முக்கியம்.

காலையில் என்னை எழுப்ப சொல்லி விட்டு தானே தூங்கினாய்? நேற்று உனக்கு வேலையும் இல்லை. நான் நேற்று காலையில் மறந்து விட்டேன். ஞாபகம் வந்த போது மணி ஆறேமுக்கால். அப்பொழுது உனக்கு அழைத்த போது, கட் செய்து, "ஐயோ! 6:50" என்றொரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ஓடினாய். உன்னை மறந்தேனா என்றெனக்கு தெரியவில்லை. ஆனால், அந்த நாற்பத்தைந்து நிமிடங்கள் நான் உன்னை நினைக்கவே இல்லை. இதொரு வகையில் பார்த்தால் உன்னுடைய வெற்றி தான். என் மனதிலிருந்து உன்னை மாய்த்து, என்னுடன் இருப்பது தானே உன் லட்சியமே? இதெல்லாம் ஒரு லட்சியாமா?

அனால் பாரேன். ஒரு லட்சியத் தோழி. எத்தனை பேருக்கு வாய்க்கும்? இதையெல்லாம் தான் நினைத்துக்கொண்டிருந்தேன். எழுப்பி விடுவதும் கைபேசியால் எளிதாகிவிட்டது. ஆஃப் செய்ய முடியாத அலாரம் அடுத்தவர் ஒருவர் அழைப்பது தானே?

என்னவெல்லாம் சௌகரியங்கள்? தொழில்நுட்பம். வளர்கிறது. மானுடம். வளர்கிறது. உன்னை மாய்த்து என்னை வளர்க்கும் ஒரு அரிய கலையை லட்சியமாகக்கொண்டு... விடு. மனம் விடுதலை பெற மிக கடினம். சிறையை விட அதிக கொடுமையானது இந்த மனம். மன்னிப்பவர் கொடுக்கும் தண்டனை அதிகமானது. பிதற்றுகிறேன்.

அந்த நாற்காலி பற்றி சொன்னேன் தானே? அதை அப்படி போடுவதில் ஒரு சௌகரியம் உள்ளது. தூங்கலாம். ஆனால் மேலே குழல்விளக்கு. அதுவும், நீ இப்பொழுது ஒரு குழல்விளக்கை கற்பனை செய்து கொண்டாயே? அதை விட பிரகாசமானது.

ஆஸ்திரேலியாவில் மணி ஒன்பதரை. இப்பொழுது பகல் வெளிச்சத்தை சேமிக்காத தினங்கள். கோடை காலம் அங்கே. உலகில் கிறிஸ்துமஸ் கோடை காலத்தில் வரும் ஒரே நாடு அது தான். நல்ல நாடாம். அங்கே தான் என்னை மனச்சிறையில் அடைப்பார்கள். ஆன்சைட் என்று பெயருமிடுவார்கள். அங்கே மனிதர்கள் அலுவலகத்திற்கு பறக்கிறார்கள் இப்பொழுது. அங்கே அவர்களில் யாரேனும் வந்து விட்டால் இங்கு ஓய்வு தான்.

ஓய்வு தான் பல சிந்தனைகளுக்கும் காரணமாம். சும்மா இருப்பதென்றால் ரொம்ப கஷ்டம். மனம். எத்தனை நாட்கள் என்ன செய்கிறாய் என கேட்டதற்கு ‘சும்மா இருக்கிறேன்’ என்று பதிலளித்துள்ளேன்? அப்பொழுது எல்லாம் நான் சும்மா இருக்கவில்லை. உன் குறுஞ்செய்தி வராதா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். யோசனைக்கும் சும்மாவுக்கும் வெகு தொலைவு.

அந்த விளக்கை கற்பனை செய்து கொண்டாயா? அதை பார்த்துக்கொண்டே உறங்க முடியுமா? உன் நினைவு. அது இன்னொரு பக்கம். கண்ணில் கர்சீப் இடலாம். நினைவில்? உறக்கம் இன்பகரமான ஒரு செயல். ஆனால் வந்துத் தொலயணுமே? எந்த பக்கத்திலிருந்து அம்பு வருகிறது என்று யோசித்தால் முன்னூற்று அறுபது பாகை போதவில்லை. விடியும். ஆனால் இந்த நினைவைக்கொண்டு விடியும் வரை வாழ்ந்தால் ஒரு வேளை வீட்டிற்கு போகாமல், மரணிக்க முயற்சிப்பேனோ என்கிற பயம்.

என்னை மொத்த எதிர்மறை சிந்தனையின் உருவம் என்பார்கள். நான் அப்படியா பேசுகிறேன்? இதெல்லாம் நடப்பவை தானே? என்னை யாரும் புரிந்து கொள்வதில்லை. அலைகிறேன். "ஓடு. தொப்பை குறையும்", என்கிறார்கள். என் ஓட்ட வேகத்தை கண்டால், நீ ஒரு புன்னகை புரிவாய். உன் புன்னகையைக் காண நான் நின்று விடுவேன். அப்படி நிற்கையில், பின்னிருந்து ஒரு குரல், “ஓடுடா குண்டா” என்று கதறும். மனதளவில் பலவீனமாக தான் இருக்கிறேன். என் மனம் ஒல்லியாக தான் இருக்கிறது. உடல் தான், கொஞ்சம் உப்பி விட்டது. இன்னும் இருபத்தாறு கிலோ குறைத்தால் தான் நூறைத் தொட முடியும்.

உடல் பெரிதென்றால் பலவீனம். மனம் சிறிது என்றால் பலவீனம். எது பலவீனம் என்று யார் முடிவு செய்கிறார்கள்? எதை வைத்து முடிவு செய்கிறார்கள்?

நடக்க முடியவில்லை. உன் நினைவுகளால் தேங்குகிறது. நினைவுகள் தேங்க தேங்க மனம் மட்டும் ஏன் பருமனடையவில்லை? உனக்காவது தெரியுமா? ஒரு வழியாக உன் நினைவை அகற்ற ஒரு வழி கிடைத்தது. பாட்டுக் கேட்பது. அதிலும் பார், இந்த வாலி, “நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்” என்று சொல்லி சும்மா இருப்பவனை கலக்கி விடுகிறார். பேய் படத்தின் பாட்டில் கூட “தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு, இடைவேளியினில் என்னை நீ பூட்டு”. எல்லா பாட்டிலும் காதல். எத்தனை இன்ட்ரோ சாங் தான் கேட்பது? அதிலும் கற்பனை வறட்சி. ரௌத்திரம். வேறேதுமில்லை.

ஒருவர் திருப்பாவை பற்றி பேசத்துவங்கினார். அப்படியே அபிராமி அந்தாதி, வைரமுத்து, குறுந்தொகை என்றொரு சுற்று அடித்து விட்டு பார்த்தால், மணி ஐந்து. எழுந்து சென்று தேநீர் அருந்தி விட்டு வந்தால், வீட்டிற்கு செல்லும் நேரமாகிவிடும். ஆனால் மனம் கொள்ளவில்லை. கண்கள், “என்னை மூடு” என்று அழுதன. டேபிள் ஓடு சாய்ந்தேன். தொப்பை இடித்தது. மல்லாக்க படுத்து, கண்ணில் கர்சீப் போட்டுக்கொண்டேன்.

“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
(இந்த வரியை முணுமுணுத்தேன். தெரியாது)
பூங்குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைப் பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்”

அடுத்தது...

“ஆழிமழைக் கண்ணா...”

உறங்கிப் போனேன். எல்லாம் மனம் தான். ஒரு கொலுசுச் சத்தம் என்னை எழுப்பியது. மணி ஆறு. ஒரு மணி நேரம் ஒன்பது நிமிடம் போல் இருந்தது. “விடிஞ்சுருச்சு” என்றாள். “ம்... இப்போ தான் தூங்கிட்டேன்” என்றேன். அவள் காலையிலே அரைத்தூக்கத்தில் எழுந்து வந்திருந்தாள். எத்தனை பேர்? ஆஸ்திரேலியாவில் பலர் வாழ தூக்கம் தொலைக்கிறோம். பணம் வருகிறது. சரிதான். அவளோடு பேசிக்கொண்டிருந்தேன். அவள் பக்கத்து டீம்.

“கார்த்திக் வந்தா போய்டலாம்...”
“அவர் வந்தா தான் போணுமா? தனிய சாப்டா ஒத்துக்காதா?” என்றாள்.
“போர் அடிக்கும்” என்றேன். கடந்த இரண்டு மணி நேரமாக எனக்கு போர் அடிக்கவே இல்லை. உன் நினைவுகளை மறப்பது ஒரு நல்ல விளையாட்டு. ஆனால் ஏனோ அப்படி சொன்னேன்.
அவள் சிரித்தாள். ஜீன்ஸ் போடும்போதும் கொலுசு போடுவாள். நவநாகரீகத்தின் பழமைவாதி. தூக்கம் கலைந்து விட்டது. மின்னஞ்சல் படித்துக்கொண்டிருந்தாள். நான் எழுந்து நின்று நெளிச்சு கொடுத்தேன். தசைகள் சிரித்தன. நன்றிகள் கூறின.

கார்த்திக் வந்தார். அவரோடு கீழே தேநீர் அருந்த சென்றேன். ஆறேமுக்கால் ஆகி விட்டது. கைபேசியை எடுத்துப்பார்த்தேன். “காட் அப்” என்ற குறுஞ்செய்தி வந்திருந்தது. இன்றும் இந்நேரம் உன்னை மறந்து விட்டேன். வெற்றி உனதே.

Monday, November 11, 2013

யாயும் ஞாயும்

"யாயும் யாயும் யாராகியரோஅனென்று நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழியரிடும் உறவு சேர்ந்த்தது என்ன
ஓரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த்த நீர்த் துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன"

இந்த வரிகள் உள்ள பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலாக தான் இருக்க முடியும். 'நறுமுகையே நறுமுகையே' என்ற இந்த பாடலின் வரிகள் 'குறுந்தொகை' யிலுள்ள ஒரு பாட்டில் இருந்து தழுவி எழுதப்பட்டது. அந்த பாடல்:

"யாயும் ஞாயும் யாரா கியரோ 
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் 
யானும் நீயும் எவ்வழி யறிதும் 
செம்புலப் பெயனீர் போல 
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே"

இது குறிஞ்சி நில தலைவன் கூற்றாக வரும் பாடல்.
இதை எழுதியவர் பெயர் தெரியவில்லை. அதனாலேயே பாட்டில் வரும் 'செம்புலப் பெயனீரார்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த பாட்டின் பொருள்,

"உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களா?
என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவினர்கள்?
நீயும் நானும் எவ்வழி அறிமுகமானவர்கள்?
(எனினும்) பாலை நிலத்தில் பெய்த மழை போல 
நம்மிருவரது அன்புடைய நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன."


இதை கவிஞர் மீரா (வாசகப் பர்வம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும்) அருமையாக கிண்டலடித்து இன்றைய சமூஹத்தைப் பற்றி பாடுகிறார்.

"உனக்கும் எனக்கும்
ஒரே ஊர் - 
வாசுதேவ நல்லூர்...

நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட...

உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக் காரர்கள்-
மைத்துனன்மார்கள்

எனவே செம்புலப்பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.


இந்தப் பாட்டுக்கு மீரா இட்ட தலைப்பு நவயுகக் காதல். இதை சுஜாதா தன்னுடைய 'காதல் என்பது ...' கட்டுரையில் சொல்லி முடித்திருப்பார்.