Saturday, January 25, 2014

அம்மா வந்தாள் - தி ஜானகிராமன்

சந்தோஷமாக இருக்கிறது. ‘அம்மா வந்தாள்’ ஒரு முறை படித்துவிட்டேன். நான் வாசிக்கும் முதல் தி.ஜானகிராமன் எழுதிய புஸ்தகம் இது. தி.ஜா. வின் வசனங்களும், உரையாடலை அமைக்கும் வண்ணமும் கலக்கல். கதை பாத்திரங்களும், கதையின் போக்கும், எண்ண ஓட்டங்களும், பிராமண மொழியும் கவர்ந்தது. இவ்வளவு நாள் ஏன் யாரும் இந்த புத்தகத்தை அறிமுகம் செய்யவில்லை என்கிற கடுப்பு இருந்து கொண்டே இருந்தது.

கதை இது தான். அப்பு, தண்டபாணிக்கும் அலங்காரத்தம்மாளுக்கும் புதல்வன். அவனுக்கு கூட பிறந்தவர்கள் இன்னும் ஐந்து பேர். இருவர் பெண்கள். அதில், மூத்தவளுக்கு திருமணம் ஆகி சேலத்தில் இருக்கிறாள். அண்ணன் கல்லூரி வாத்தியார். இருவர் படிக்கிறார்கள். இவன் மட்டும் வித்தியாசமாக, நல்ல படிப்பாக படிக்க வேண்டும் என்று அலங்காரம் ஆசைப்பட, பவானியம்மாள் நடத்தும் குருகுலத்தில் அவனைக் கொண்டு சேர்க்கிறார் தண்டபாணி.

அங்கு, பதினாறு வருடங்களாக, வீட்டுக்கே மிகக்குறைவாக சென்று, படித்து வருகிறான் அப்பு. அங்கே ‘இந்து’ என்றொரு பெண். அவளுக்கும், இவனுக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப பிடிக்கும் என்றாலும் அப்புவுக்கு அம்மா மேல் உள்ள மரியாதை காரணமாக, இந்து இவனை தொட முயல்கையில் இவன் விலகி செல்கிறான். “நான் உன்னை என் அம்மாவாக தான் நினைத்தேன். இந்த வேதம் போல் நினைகிறேன் உன்னை” என்று கூற, இந்துவோ “என்னைப் போய் உன் அம்மாவோடு ஒப்பிடாதே. நான் அவ்வளவு மோசம் இல்லை” என்கிறாள். இதை மனதில் வைத்துக்கொண்டு வீடு வந்து சேருகிறான் அப்பு.

என்னடா கோபு? மீசைய எப்போ எடுத்த?” என்ற கேள்வியுடன் சாதாரணமாக வீட்டுக்கு வரும் அப்புவிடம், “அது சிவசு மாமான்னா?” என்கிறாள் தங்கை. அதிலிருந்து, சிவசு அடிக்கடி வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருக்க, கோவமாகி, தன் தாய் தவறானவள் தானோ என்று நினைக்கிறான். ஒரு கடிதம் வருகிறது. பவானியம்மாளுக்கு உடல் நிலை சரியில்லை என்று இந்து எழுதியிருந்தாள். காவேரிக் கரையில், கரூர் அருகில் தான் பாடசாலை. வீடு சென்னையில். சேலம் வழி சென்றால் அக்காவையும் பார்க்கலாம் என்று சொல்லி, சேலம் வழி பவானியம்மாளை பார்க்க பயணிக்கிறான். அப்படியே அக்கா வீடு வழியாக பாடசாலை வந்தடைகிறான்.

தயங்கித் தயங்கி இந்துவிடம், “உனக்கெப்படி தெரியும்?” என்று கேட்டதற்கு, “இதெல்லாம் வீட்டிற்கு தெரியும் முன்னரே ஊருக்கு தெரிந்து விடும்” என்கிறாள். வெகு நாட்களாக காணவில்லை என்று பத்தாம் நாள் ஒரு கடிதம் வருகிறது. அங்கிருந்து சில நாட்களுக்கு பிறகு அம்மாவும் வருகிறாள். அவளோடு வந்துவிட சொல்கிறாள். இவன், தான் பாடசாலையை பார்த்துக்கொள்ள போவதாக சொல்லி இங்கேயே தங்கி விடுகிறான். ~~கதை முற்றிற்று~~~

காவேரி என்கிற பாத்திரம் உண்மையிலேயே ஒரு தங்கை பாத்திரம் கூட இருப்பது போல இருந்தது. அவளுடைய சிரிப்பும், வேடிக்கையான நடிப்பும், சிரிப்பு வந்தது. அவள் அவளுடைய வாத்தியார் போல அபிநயம் பிடித்துக் காண்பிப்பதும், நடப்பதும், சிரிப்பதும் – எல்லாம். முக்கியமான பாத்திரங்கள் யாவும் அருமை. அப்பு, இந்து, அலங்காரம், தண்டபாணி, பவானியம்மாள் – எல்லாரும்.

என்ன தான் இருந்தாலும் தண்டபாணி போல ஒரு மனிதன் இருக்க முடியுமா என்கிற கேள்வி கூட எழலாம். ஆனால், படிக்கையில் நம்மை நம்ப வைத்திருப்பார் தி.ஜா. நம்பிக்கை அதானே எல்லாம்?

எனக்கு முரண் என்று எந்த இடத்திலும் ஏற்படவில்லை. கற்கால மனிதனைப் போல வாழ்வதானால், இலக்கியமே தேவை இல்லையே? வளர்ந்து வந்து விட்டோம்.. மனிதனின் ஆதி உணர்சிகள் வெட்கமும் காமமும் தான்.. இப்போ தான் காதல், எனக்குன்னு ஒரு பொண்டாட்டி எல்லாம். தவம் நம்மை பின்னோக்கி அழைத்து செல்லுமாயின், செல்லட்டுமே. ‘ஞான சூரியன்’ என்று ஒரு இடத்தில் அலங்காரம் தண்டபாணியையும், ‘தேவடியாள்’ என்று தண்டபாணி ஒரு இடத்தில் அலங்காரத்தையும் சொல்வது மனமும் செயலும் வேறு என்பார் போல இருக்கும்.

அலங்காரம் மேல் நமக்கு வரும் ஒரு வியப்பும் மரியாதையும் தான் தி.ஜா. வின் வெற்றி. அவள் எப்படிப்பட்டவளாக இருக்கட்டுமே. எதற்காகவும் இறங்கிப்போகாத, பேசவே செய்யாத, தன விருப்பப்படி அனைத்தையும் நடத்தும் அலங்காரம் மேல் மரியாதை வராமலிராது. காமம் வேறு. அது ஒரு அடிப்படை உணர்ச்சி. இன்று ‘பாதுகாப்பு’ இருக்கிறது. இன்றும் அலங்காரங்களும், சிவசுக்களும்,  தண்டபாணிகளும் இருக்கிறார்கள். அப்புகள் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

புரோஹிதம் செய்யும் ஒருவர், எங்க தெரு கோவிலில் வேலை பார்க்க வந்தார். ஸ்பஷ்டமாக மந்திரங்கள் சொல்வார். அவருக்கு ஒரு 35 க்கு மேல் வயது இருக்கும். அவருக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள். கஷ்டமான விஷயம் இந்த பிழைப்பு. சேது படத்தில் சொல்வது போல, அந்த தட்டில் விழுந்தால் தான். ஆனால், அப்பு பிழைத்துக்கொண்டான். அது இக்காலத்தே சற்று ஒத்துக்கொள்ள முடியாதது.

கதையில் ஒரு முடிவு என்பது இருக்காது. ஒரு ரஃப் என்டிங். நீங்களாக என்ன நடந்திருக்கும் என்று நினைத்துக்கொள்ளலாம். அதன் பின் கதையை ஒரு மூன்று பாதைகளில் யோசித்துப்பர்க்கலாம். அதனால் ஒரு கதையை சொல்வதை விட, ஒரு நிகழ்வை சொல்லி பூர்த்தி செய் என்று கொடுத்துவிட்டது போல இருந்தது.

இந்த புத்தகம் உண்மையிலேயே காரணம் இல்லாமலே பிடித்திருக்கும். பா.ராகவன் அவர்கள் “அம்மா வந்தாள் ஜானகிராமன் காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்” இப்படி சொல்லியிருந்தார். இது என்னமோ உண்மை தான். தி.ஜா. வின் யதார்த்த எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். இது தமிழ் இலக்கியத்தில் நீங்கள் எக்காரணம் கொண்டும் படிக்க தவற விட கூடாத புத்தகம்.



Wednesday, January 22, 2014

அ. வெண்ணிலா எழுதிய "ஆதியில் சொற்கள் இருந்தன"

2014ஆம் ஆண்டில் வாசித்த முதல் புஸ்தகம், . வெண்ணிலா எழுதியஆதியில் சொற்கள் இருந்தன”. அன்பு நிலா பதிப்பகம் வெளியிட்ட கவிதைத்தொகுப்பு. விலை ரூபாய் 40/-.

68 கவிதைகள் கொண்ட தொகுப்பு. சோகம், சின்ன சின்ன கள்ளத்தனங்கள், இயற்கை, அன்றாட வாழ்வு என பல விதங்களில் எழுதப்பட்ட வரிகள். தோட்டம், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றை அடிக்கடி பார்க்கலாம். நிறைய பெண்கள் பார்வை உலக அமைப்பைக் கற்றுக்கொள்ள முடிந்தது.
ஒரு கவிதை:

தேதி மாறாமல்
திட்டமிட்டதைப் போல்
மாதா மாதம்
நிகழ்கிறது
எனக்கான சுழற்சி என்றாலும்
நிகழும் முதல் கணம் 
விபத்தொன்றை
சந்தித்தார் போல்
அதிர்கிறது மனசு.

இதை படித்துவிட்டு யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் இருந்தது. நல்லவேளை நீங்கள் இருந்தீர்கள்.
இந்த கவிதை ஒரு பெண்ணுக்கானது. ஆனால், இதிலுள்ள அற்புதம், என்னை மிரள வைத்தது. என்ன தான் இருந்தாலும், கணக்கு படி பார்த்தாலும், தயாராக இருந்தாலும், காலையில் தூக்கத்தில் கையை கிழித்துக்கொண்டு ரத்தம் கொட்டினால் எப்படி இருக்குமோ, அப்படி தானே இருக்கும் ஒரு பெண்ணுக்கு

பெண்களின் பார்வை எல்லாவற்றிலும் எவ்வளவு மாறுபட்டு நிற்கிறது. முக்கியமாக காமம் சார்ந்து பெண்கள் எழுதுவது வியக்கும் படியாக இருக்கிறது. உறுப்பின் பெயர்களைக் கொண்டு, வடிவமைப்புக்காக திணிக்கப்படும் அங்கங்களின் பெயர்கள் அல்லாமல், இவர்களால் சரளமாக காமத்தை சொல்லி போக முடிவது ஒரு அதிசயம். குட்டி ரேவதியின்ஜன்னல்கள் இருக்கும் வீடுக்யுவில் இருக்கிறது.

இந்த கவிதை என்னை மேஸ்மரைஸ் செய்தது.

களைத்துச் சலித்து
உள் நுழைகிறேன்.
ஆடை மாற்றுகையில்
கழன்று விழுகின்றன
உடல் முழுவதும் பதிந்திருந்த
பார்வைகள்
தீண்டல்கள்
தொடுதல்கள்
உரசல்கள்
உதறி எடுத்து 
வேற்றாடை மாற்றித்
திரும்புகையில்
அத்தனையையும்
இரவு தன்
கைகளில்
சேகரித்துக் கொண்டிருந்தது.

இது ஒரு பெண்ணால் மட்டுமே எழுதியிருக்க முடியும் என்று நம்புகிறேன்.

 ரசனை. அது தானே எல்லாம். மழை, சூரியன், நிலா என்கிற எப்போழுதுமிருக்கும் கவிதையை தாண்டி, முத்தம், வலி போன்றவற்றின் அழகையும் கூறியது சுகம். கவிதை எப்படி இருக்கிறதென்றெல்லாம் சொல்லாமல் நான் ஒரு கேள்வி கேட்க விழைகிறேன். அந்த மதியத்தை உண்டு கொண்டிருக்கும் அணில் உங்கள் தோட்டத்தில் தான் இன்னும் உள்ளதா?

கனவு பற்றி எழுதியதில்,

அன்றாடங்களைத்
தொலைக்கும்
அரிய பொழுதொன்றில்
வாய்க்குமோ என்னவோ!

-இது என்னைக் கவர்ந்தது.
கனவை, அன்றாடங்களைத் தொலைக்கும் இடத்தில் தேட சொல்வது, ரசிக்கும் படி இருந்தது. முரண்களை சொல்வதிலும் சில இடங்களில் கலக்கியிருக்கிறார்.

1.
துண்டொன்றைக்
கட்டிக் கொண்டு
அம்மாவாக முடிகிறது
குழந்தைகளால்

குழந்தையாக முடியாமல்
அல்லற்பட்டுக் கொண்டிருப்பது
அம்மாக்கள் தான்.

2.
குழந்தை
உறங்கி விட்டதை
உறுதிபடுத்திக் கொண்டு
நின்று போகும் தொட்டில்.

ஆடிக் கொண்டிருக்கிறதா
தொட்டில் என
உறுதி செய்து கொள்வதே இல்லை
குழந்தையின் உறக்கம்.

மேலும் பல கவிதைகள் நல்ல எதிர்ப்பதங்கள் தந்து நின்றது நன்றாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பற்றிய கவிதை கிளாஸ். கண்ணாடியில் தன்னையே கண்டு விட்டதும். புதியதாய் கவிதை படிப்பவன் தான் நான். மிகவும் பிடித்திருந்தது. ரசித்தேன்.

கவிதையில் நல்லது கெட்டது என்றெல்லாம் கிடையாது. எல்லாம் நல்ல கவிதைகள் தான். அந்த அனுபவம் உங்களுக்கு வரும் வரை, எல்லா கவிதைகளும் கொஞ்சம் மனதில் நிற்காது தான். ‘சாம்ராஜ்’-இன் ‘காணாமல் போனவர்கள்’ பற்றிய கவிதையாக இருக்கட்டும், விநாயக முருகனின் ‘கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’ பற்றிய கவிதையாக இருக்கட்டும், அந்த நிலைமையை பார்க்காத வரை அது வார்த்தைகள் தான். பார்க்கும்போது தான் அது அனுபவம் ஆகிறது.


கவிதைகள் வாழ்வின் பெரிய கதையல்லாத விஷயங்களை சொல்வது தான். இதில் பெரிய விஷயங்கள் மிக சுலபமாக சொல்லப்படுகின்றன. ‘ஆதியில் சொற்கள் இருந்தன’ ஒரு நல்ல தொகுப்பு. நல்ல மாலைப் பொழுதை நீங்கள் இந்த புத்தகத்திற்காக கண்டிப்பாக கொடுக்கலாம்.