Wednesday, January 22, 2014

அ. வெண்ணிலா எழுதிய "ஆதியில் சொற்கள் இருந்தன"

2014ஆம் ஆண்டில் வாசித்த முதல் புஸ்தகம், . வெண்ணிலா எழுதியஆதியில் சொற்கள் இருந்தன”. அன்பு நிலா பதிப்பகம் வெளியிட்ட கவிதைத்தொகுப்பு. விலை ரூபாய் 40/-.

68 கவிதைகள் கொண்ட தொகுப்பு. சோகம், சின்ன சின்ன கள்ளத்தனங்கள், இயற்கை, அன்றாட வாழ்வு என பல விதங்களில் எழுதப்பட்ட வரிகள். தோட்டம், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றை அடிக்கடி பார்க்கலாம். நிறைய பெண்கள் பார்வை உலக அமைப்பைக் கற்றுக்கொள்ள முடிந்தது.
ஒரு கவிதை:

தேதி மாறாமல்
திட்டமிட்டதைப் போல்
மாதா மாதம்
நிகழ்கிறது
எனக்கான சுழற்சி என்றாலும்
நிகழும் முதல் கணம் 
விபத்தொன்றை
சந்தித்தார் போல்
அதிர்கிறது மனசு.

இதை படித்துவிட்டு யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் இருந்தது. நல்லவேளை நீங்கள் இருந்தீர்கள்.
இந்த கவிதை ஒரு பெண்ணுக்கானது. ஆனால், இதிலுள்ள அற்புதம், என்னை மிரள வைத்தது. என்ன தான் இருந்தாலும், கணக்கு படி பார்த்தாலும், தயாராக இருந்தாலும், காலையில் தூக்கத்தில் கையை கிழித்துக்கொண்டு ரத்தம் கொட்டினால் எப்படி இருக்குமோ, அப்படி தானே இருக்கும் ஒரு பெண்ணுக்கு

பெண்களின் பார்வை எல்லாவற்றிலும் எவ்வளவு மாறுபட்டு நிற்கிறது. முக்கியமாக காமம் சார்ந்து பெண்கள் எழுதுவது வியக்கும் படியாக இருக்கிறது. உறுப்பின் பெயர்களைக் கொண்டு, வடிவமைப்புக்காக திணிக்கப்படும் அங்கங்களின் பெயர்கள் அல்லாமல், இவர்களால் சரளமாக காமத்தை சொல்லி போக முடிவது ஒரு அதிசயம். குட்டி ரேவதியின்ஜன்னல்கள் இருக்கும் வீடுக்யுவில் இருக்கிறது.

இந்த கவிதை என்னை மேஸ்மரைஸ் செய்தது.

களைத்துச் சலித்து
உள் நுழைகிறேன்.
ஆடை மாற்றுகையில்
கழன்று விழுகின்றன
உடல் முழுவதும் பதிந்திருந்த
பார்வைகள்
தீண்டல்கள்
தொடுதல்கள்
உரசல்கள்
உதறி எடுத்து 
வேற்றாடை மாற்றித்
திரும்புகையில்
அத்தனையையும்
இரவு தன்
கைகளில்
சேகரித்துக் கொண்டிருந்தது.

இது ஒரு பெண்ணால் மட்டுமே எழுதியிருக்க முடியும் என்று நம்புகிறேன்.

 ரசனை. அது தானே எல்லாம். மழை, சூரியன், நிலா என்கிற எப்போழுதுமிருக்கும் கவிதையை தாண்டி, முத்தம், வலி போன்றவற்றின் அழகையும் கூறியது சுகம். கவிதை எப்படி இருக்கிறதென்றெல்லாம் சொல்லாமல் நான் ஒரு கேள்வி கேட்க விழைகிறேன். அந்த மதியத்தை உண்டு கொண்டிருக்கும் அணில் உங்கள் தோட்டத்தில் தான் இன்னும் உள்ளதா?

கனவு பற்றி எழுதியதில்,

அன்றாடங்களைத்
தொலைக்கும்
அரிய பொழுதொன்றில்
வாய்க்குமோ என்னவோ!

-இது என்னைக் கவர்ந்தது.
கனவை, அன்றாடங்களைத் தொலைக்கும் இடத்தில் தேட சொல்வது, ரசிக்கும் படி இருந்தது. முரண்களை சொல்வதிலும் சில இடங்களில் கலக்கியிருக்கிறார்.

1.
துண்டொன்றைக்
கட்டிக் கொண்டு
அம்மாவாக முடிகிறது
குழந்தைகளால்

குழந்தையாக முடியாமல்
அல்லற்பட்டுக் கொண்டிருப்பது
அம்மாக்கள் தான்.

2.
குழந்தை
உறங்கி விட்டதை
உறுதிபடுத்திக் கொண்டு
நின்று போகும் தொட்டில்.

ஆடிக் கொண்டிருக்கிறதா
தொட்டில் என
உறுதி செய்து கொள்வதே இல்லை
குழந்தையின் உறக்கம்.

மேலும் பல கவிதைகள் நல்ல எதிர்ப்பதங்கள் தந்து நின்றது நன்றாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பற்றிய கவிதை கிளாஸ். கண்ணாடியில் தன்னையே கண்டு விட்டதும். புதியதாய் கவிதை படிப்பவன் தான் நான். மிகவும் பிடித்திருந்தது. ரசித்தேன்.

கவிதையில் நல்லது கெட்டது என்றெல்லாம் கிடையாது. எல்லாம் நல்ல கவிதைகள் தான். அந்த அனுபவம் உங்களுக்கு வரும் வரை, எல்லா கவிதைகளும் கொஞ்சம் மனதில் நிற்காது தான். ‘சாம்ராஜ்’-இன் ‘காணாமல் போனவர்கள்’ பற்றிய கவிதையாக இருக்கட்டும், விநாயக முருகனின் ‘கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’ பற்றிய கவிதையாக இருக்கட்டும், அந்த நிலைமையை பார்க்காத வரை அது வார்த்தைகள் தான். பார்க்கும்போது தான் அது அனுபவம் ஆகிறது.


கவிதைகள் வாழ்வின் பெரிய கதையல்லாத விஷயங்களை சொல்வது தான். இதில் பெரிய விஷயங்கள் மிக சுலபமாக சொல்லப்படுகின்றன. ‘ஆதியில் சொற்கள் இருந்தன’ ஒரு நல்ல தொகுப்பு. நல்ல மாலைப் பொழுதை நீங்கள் இந்த புத்தகத்திற்காக கண்டிப்பாக கொடுக்கலாம்.

1 comment:

  1. நேர்த்தியான விமர்சனம்.. கவிதைகளின் உலகம் பரந்தது. பல விசித்திர அனுபவங்களைத் தரவல்லது. இறங்கி விட்டீர்கள். நல்ல வேளை முன்பே நீச்சல் கற்றுக் கொண்டு விட்டீர்கள் :-) வாழ்த்துக்கள்

    ReplyDelete