சவரீசன். நாகர்கோயில் பக்கமோ, திருநெல்வேலி பக்கமோ இருந்தால் இந்த பெயரை அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில், ஏதேனும் பத்திரிகையிலும் படித்திருக்கலாம். இந்த பெயரை ஆங்கிலத்தில் (Savareson) தான் முதலில் படிக்க நேர்ந்தது. அப்போது சவரேசன் என்று இதைப் படித்து 'என்ன டா பேரு இது' என்று நினைத்துக் கொள்வேன். “சவரீசன்” என்று தம் பெயரை சரியாக படிக்க, மாண்புமிகு சவரீசன் அவர்களே இதை சொல்ல வேண்டி இருந்தது.
செப்டம்பர் மாதத்தில் திருச்சி NIT இல், Festember என்கிற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எங்கள் கல்லூரியில் இருந்து நாங்கள் ஒரு 15 பேர் சென்றிருந்தோம். அப்பொழுது கமல்ராஜூம் நானும் தான் டீம் என்று பேசிக்கொண்டு தான் போனோம். அங்கே சென்ற உடன், சவரேசனும் நானும் ஒரு டீம் என்று சொல்லி விட்டார் எங்கள் தலைவர். 'யாரு டா இவன் சவரேசன் ?' என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அன்றே அந்த அரை இருட்டில், NIT-இன் தெருவிளக்கின் நடுவில் தான் சவரீசனை முதல் முறையாக அறிமுகத்துடன் சந்திக்கிறேன்.
அடுத்த நாள், எல்லா கேள்விகளுக்கும் சவரீசனே பதிலளித்ததும், ஒரே சுற்றில் பல புள்ளிகள் எடுத்து நாங்கள் வெற்றி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக அந்த போட்டிகளின் போது தான் எங்கள் நட்பு தொடங்கியது. சவரீசன் ஒரு அறிவுப்பசி மிகுந்த ஜன்மம். பஜ்ஜி சாப்பிட்டால் கூட அதை மடித்து தரும் காகிதத்தில் ஏதேனும் செய்தி உள்ளதா என்று படித்துப்பார்த்து தான் குப்பையில் போடுவான். அந்த வருடம் சில கல்லூரிகளில் நடக்கும் "Tamil Quiz" போட்டிகளில், நாங்கள் தான் வின்னர்ஸ். பதினெட்டு பாகங்களாக பாடப்படும் நூல் 'கலம்பகம்' என்பது மட்டும் தான் நான் எப்பொழுதோ சொன்ன ஞாபகம் இருக்கிறது.
மிகவும் தீவிரமாக ஆனந்த விகடன், தினத் தந்தி, தி ஹிண்டு படிப்பதில் இவரை மிஞ்சுபவர் என் வட்டத்தில் யாருமில்லை. 'சாமி' படத்தில் 'கோட்டா சீனிவாச ராவ்' சொல்வது போல, "தினம் 2 நியூஸ் பேப்பர் படிக்கிறேன்" லிஸ்ட் ஆளு இவரு. தினமும் 2 மணி நேரம் செய்தித்தாள் வாசிப்பார்.
வேலைக்கு சேர்ந்த புதிதில் சவரீசனோடு தான் தங்கி இருந்தேன். தினமும் ஆபிசுக்கு சைக்கிளில் தான் போக்கும் வரவும். நான் அப்போ அமைந்த சில பெரிய இடத்து நட்புகளால், 'Philharmonic Orchestra', 'Led Zeppelin' என ஐந்து பாடல்கள் கேட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவேன். அதே ஐந்து பாடல்களை தான் இரண்டு மாதங்கள் திரும்ப திரும்ப கேட்டேன். காலையில் ஒன்றாக தான் சாப்பிட செல்வோம். அங்கே அப்போதெல்லாம் ஒரு இட்லி இரண்டு ரூபாய் இருந்ததாக ஞாபகம். வெளுத்து வாங்குவோம்.
அப்படி தான் பல விஷயங்கள் பகிர தொடங்கியதும், "சில நேரங்களில் சில மனிதர்கள்" தொடங்கி "மாலதி டீச்சர்" வரை எல்லாம் படித்ததும். அந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் மைலாப்பூருக்கு மாறி விட்டேன். சவரீசனுக்கு இன்னும் ஒரு மாத மென்பொருள் பயிற்சி பாக்கி இருந்தது. வீடு மாறிய பொழுது நான் அவர்களோடு செல்லவில்லை. நான் வேறு ஒரு குரூப்போடு சென்றுவிட்டேன். ஆனால், வெள்ளிக்கிழமை ஆகிவிட்டால், சபரி, சிவா, பிரபு, GS, நான் - ஐந்து பேரும் இரவு முழுவதும் ஏதேனும் பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்போம்.
இந்த குழுவுக்கு நாங்களே வைத்துக்கொண்ட பெயர், "மொட்டை மாடி இலக்கியக் குழு". சென்னையில் இருந்த நாட்களின் சாதனைப் பட்டியலில், இதை வாராவாரம் கூட்டியதையும், பேசித் தீர்த்ததையும் சேர்த்துக்கொள்ளலாம். ஏதேதோ பேசி பேசி, ஏதேதோ யோசித்து யோசித்து, நல்ல வருங்கால இந்தியாவை வடிவமைப்பதாக எண்ணி, நாங்கள் பேசாத தலைப்புகள் இருக்காது என்றே நினைக்கிறேன். அரசாங்கம், வரலாறு ஆகிய தலைப்புகளில் சவரீசன் பின்னி எடுப்பார். நமக்கு தெரியாத பெயர்களாக சொல்லுவார். நாங்கள் "ஆஆஆ..." என்று பார்ப்போம்.
சவரீசனிடம் இருக்கும் கெட்ட பழக்கம் இந்த இரவு கூடும் குழுவிற்கு வந்ததும், ‘பாப்புலர்' பாடல்களை போட்டு விடுவது. “Why this kolaveri”, “என்றென்றும் புன்னகை" போன்ற இரவு நேரத்திற்கு சற்றும் உகந்ததல்லாத பாடல்களை மட்டுமே போடுவார். இங்கே பிரபு வாழ்க்கையின் சுவாரசியங்களை அறுவை சிகிச்சை மூலம் பிரித்து, சாலையில் நடந்து செல்லும் எந்தவொரு பெண்ணிற்கும் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடும் என்பதை சொல்லிக்கொண்டிருப்பார். ஹெட்செட் வேறு மாட்டிக்கொண்டு, கணினி திரையை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும் சவரீசனை கடுப்பாகி கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்ப்போம்.
சவரீசனும், சிவாவும், நானும் நான் கேமரா வாங்கிய புதிதில் ‘மந்திரகிரி மகாயுககாளி காமந்திஹாதேவி’ கோவிலுக்கு சென்றோம். பெயரை சொன்னால் சட்டென்று புரியாது. இது தாம்பரத்திற்கு மிக அருகில், சானடோரியத்தில் தான் இருக்கிறது. சனிக்கிழமை மாலை போகலாம் என்றிருந்த கோவிலுக்கு இழுத்தடித்து ஞாயிறு காலை சென்றோம். இப்படி ஒரு இடம் சென்னையிலா என்பது போல அமைதியாக, அதிகாலை குளிருடன் இருந்தது அந்த மலைக்கோவில். சவரீசன் பொதுவாக மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். அவர் மலை மேல், சமவெளியை பார்த்து கையை விரித்து இயற்கையை ரசிக்கும் புகைப்படம் ஒன்று இருக்கிறது. வெகு அரிய புகைப்படங்கள் பக்கத்தில் என்றாவது ஆனந்த விகடனுக்கு அனுப்ப வேண்டும்.
வீட்டிற்கு சென்றால், மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, வடக்கு பக்கமாக நாற்காலியை திருப்பிபோட்டுவிட்டு, காலை தூக்கி திண்டில் வைத்து அமர்ந்து கொள்வார். “இப்போ சொல்லு…”, என்று அவர் சொன்ன பின் நீங்கள் ஒரு மணி நேரம் பேசினாலும் ஒரு வார்த்தையை விடாமல் திருப்பி சொல்வார்.
அதன் பின்னர், முன்னரே தீர்மானித்தது போல, சவரீசன் அரசாங்க வேலைக்கு படிக்க துவங்கி விட்டார். தாறுமாறாக தயாராகிக்கொண்டிருந்தார். "நடிச்சா ஹீரோ தான்" என்கிறார் போல "எழுதின குரூப் 2 தான்" என்று கம்பீரமாக TCS-இல் இருந்தார். குரூப் 2 தேர்வில் தமிழகத்தில் 300-ஆம் இடத்திற்குள் வந்து இப்பொழுது பச்சை Ink கையெழுத்து போடும் அளவுக்கு பெரிய வேலை செய்கிறார்.
இப்போழுதும் தொலைபேசியில் அழைத்தால் அரை மணி நேரம் பேசுவார். இன்றும் காலையில் “என்ன தலைப்பில் எழுதுவது?” என்று கேட்டேன். “என்னை பற்றி புகழ்ந்து எழுதேன்?” என்றார். ‘சரி’ என்றதற்கு, “வேண்டாம். நீ அசால்ட் சேதுவ அழுகுணி சேதுவா எழுதிடுவ” என்று கூறினான். அப்படியா எழுதி உள்ளேன்???
இன்றளவிலும் இந்த ‘பாப்புலர்’ விஷயங்களை மட்டுமே பேசுவார். நாங்கள் அனைவரும் டாகுமெண்டரி பற்றி பேசிக்கொண்டிருந்தால், இவர் மட்டும் “எந்த ஹெல்மெட் வாங்குறது. ஆன்லைன்ல ஆர்டர் பண்ணலாமா?” என்பார். இப்படியும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இன்றளவும், “அரசாங்கத்தோட நேரடி தொடர்பு வச்சுருக்கோம்" என்று நாங்கள் மார்தட்டிக்கொள்ள காரணமாய் இருப்பவர், அண்ணல் மாண்புமிகு சவரீசன் அவர்கள் தான்.
பி.கு. புகைப்படங்கள் ஆர்டரின் பேரில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படலாம்.
Hey there raghulangdon information or the article which u had posted was simply superb and to say one thing that this was one of the best information which I had seen so far, thanks for the information #BGLAMHAIRSTUDIO
ReplyDelete